எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் பட தயாரிப்பாளர் காலமானார்..  ரஜினி உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களை தயாரித்தவரும் பிரபல அரசியல்வாதியுமான ஆர்.எம். வீரப்பன் நேற்று காலமானார். அவருக்கு வயது 98. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் காலமானதை அடுத்து ரஜினிகாந்த், எஸ் பி முத்துராமன் உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1964ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த ’தெய்வத்தாய்’ என்ற படத்தை முதன்முதலாக தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் நிறுவனம், அதன் பிறகு ’இதயக்கனி’ உள்பட ஏராளமான எம்ஜிஆர் படங்களை தயாரித்தது.

ரஜினிகாந்த் நடித்த ’ராணுவ வீரன்’ ’மூன்று முகம்’ ’தங்க மகன்’ ‘பாட்ஷா’ கமல்ஹாசன் நடித்த ’காக்கி சட்டை’ ’காதல் பரிசு’ உள்பட பல படங்களை தயாரித்தது. மேலும் சிவாஜிகணேசன், சத்யராஜ் இணைந்து நடித்த ’புதிய வானம்’ படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக நேற்று ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர் எம் வீரப்பன் அவர்களின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், ‘எம்ஜிஆரின் ’தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்றும், இன்று அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்றும் அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் மத்திய மாநில அமைச்சர்களாகி தற்போது பேரும் புகழும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆர்.எம்.வீரப்பன் ஒருபோதும் பணத்திற்கு பின்னால் சென்றவர் கிடையாது, அண்ணா கூறிய கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்ந்தவர், எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் ஆழமானது, புனிதமானது என்றும் தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுபவங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.