வேலை வெட்டி இல்லாத இவங்க திருந்தவே மாட்டாங்களா? எம்ஜிஆர்-சிவாஜி பட நடிகை ஆதங்கம்

  • IndiaGlitz, [Thursday,December 01 2022]

சமூக வலைத்தளங்களில் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் ஒரு சிலர் வதந்திகளைப் பரப்பி வரும் நிலையில் இவர்கள் திருந்தவே மாட்டார்களா என எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலை சேர்ந்த லட்சுமி என்ற யானை திடீரென இறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் யானையின் பெயர் லட்சுமி என்பதை அறியாத ஒரு சிலர், நடிகை லட்சுமி தான் இறந்து விட்டார் என சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி விட்டனர்.

இந்த வதந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பழம்பெரும் நடிகை லட்சுமியை போனில் தொடர்பு கொண்ட பலர் அவரை விசாரித்தனர். இதனை அடுத்து இந்த வதந்திக்கு விளக்கம் அளித்த நடிகை லட்சுமி, ‘பிறந்த எல்லோரும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். இறப்பதை பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால் இதுபோன்ற வதந்தி பரப்புவது குறித்துதான் கவலையாக இருக்கிறது.

வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் இதுபோன்ற நபர்கள் திருந்தவே மாட்டார்களா? என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த வதந்தியை கேள்விபட்டதும் அக்கறையாக பலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு ஒரு கவலையும் இல்லை. கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஷாப்பிங்செய்து கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகை லட்சுமி, எம்ஜிஆர் நடித்த ‘மாட்டுக்கார வேலன்’, சிவாஜி நடித்த ‘ஆனந்த கண்ணீர்’, ரஜினிகாந்த் நடித்த ‘ராகவேந்தர்’, பிரபு நடித்த ‘’என் உயிர் கண்ணம்மா’, சத்யராஜ் நடித்த ‘பாலைவன ரோஜாக்கள்’ என மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமி, ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.