எளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியல் சந்தித்த பெரும் புயல், ஒரு வரலாற்று நாயகன், இந்தியாவே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் மைல் கல்லாக விளங்கியவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள். தமிழக அளவில் அரசியல் தளத்தையே மாற்றியமைத்தவர் என்றும் சொல்லாம். திராவிடப் பகுத்தறிவில் இருந்து முளைத்தவர் என்றாலும் அதனை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றவராக எம்.ஜி.ஆர் திகழ்கிறார்.
தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் தமிழ்நாட்டு மக்களின் மனதைக் கட்டிப்போட்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். திரைப்படத்தில் பார்த்த உருவத்தையே தெய்வமாகக் கருதும் அளவிற்குத் தமிழக ஏழை, எளிய மக்களிடம் புகழ் பெற்றிருந்தார். திரைத்துறையினர் அரசியல் வாழ்வில் மையம் கொள்வது எம்.ஜி.ஆரிடம் இருந்தே தொடங்கியது. இன்னொரு புறத்தில் புரிந்து கொள்வதற்கே புதிரானவராகவும் எம்.ஜி.ஆர் விளங்கினார். காரணம் அன்றைய அரசியல் சூழல் மட்டுமல்லாது சினிமா சூழலும் மிகவும் போட்டி நிறைந்த உலகமாகவே காணப்பட்டது. சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் துருவங்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் தன்னைத் தனித்துவம் மிக்கவராக அடையாளம் காட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட வில்லை என்றே சொல்ல வேண்டும். எதைச் செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும் என்று தமிழக மக்கள் முழுவதுமாக நம்பும் அளவிற்கு மிகுந்த பிரபலமான அடையாளத்தைக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் பிறப்பு
கேராளாவை சேர்ந்த மருதூர் கோபால மேனன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். தனது தொழிலை கண்டியில் நடத்த விரும்பிய அவர் இலங்கைக்குக் குடிபெயர்ந்தார். கோபால மேனன் மற்றும் சத்திய பாமா தம்பதியினருக்கு 1917 ஜனவரி 17 அன்று ராமச்சந்திரன் நான்கு குழந்தைகளுக்கு அடுத்து ஐந்தாவதாகப் பிறந்தார். அந்த ராமச்சந்திரனே வந்து பிறந்திருப்பதாக நினைத்த இத்தம்பதியினர் ராமச்சந்திரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். கோபால மேனன் திடீரென்று இறந்துவிடவே சத்யபாமா தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம்பெயர்கிறார்.
நாடக அனுபவம்
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் அவரது சகோதரரை, தாய் சத்யபாமா பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விடுகிறார். பாய்ஸ் நாடகக் கம்பெனியில் எம்.ஜி.ஆர் அவர்கள் மிகவும் தனித்துவம் மிக்கவராகவே அறியப்பட்டார். என்றாலும் நடிக்கும்போது பெரும்பாலும் தனது பேச்சு நடையினைக் குறித்து மற்றவர்கள் கிண்டலிப்பதை ஒருபோதும் எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. இலங்கை பேச்சு நடை இவரிடம் ஒட்டிக்கொண்டது என்பதால் பல இடங்களில் கேலிக்கு ஆளாகிறார்.
பாய்ஸ் நாடக கம்பெனியை விட்டு விலகி கந்தசாமி முதலியாரின் நாடக கம்பெனியில் சேர்ந்து விட்டார் எம்.ஜி.ஆர். கந்தசாமி நாடக கம்பெனி மூலமாகத்தான் எம்.ஜி.ஆர் சினிமாவுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1936 இல் சதிலீலாவதி படத்தில் போலீஸ் வேடம் கிடைக்கிறது. அதனை ஏற்று நடித்தார். அடுத்த படத்தில் அதே வேடம் வரவே மிகவும் துணிச்சலாக அதைனை மறுக்கிறார். இதற்கிடையில் முதல் திருமணம் நடைபெறுகிறது. நாடகத் துறையில் 25 வருட கால வாழ்க்கையைக் கடந்து விட்ட எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு ராணுவத்தில் சேர்ந்து விடலாம் என்று முடிவெடுக்கிறார். இப்படி சிந்திக்கும் பொழுதே எம்.ஜி.ஆருக்கு அடுத்த வாய்ப்பு வருகிறது.
சினிமா அனுபவம்
1945 இல் எம்.ஜி.ஆருக்கு அடுத்த திருப்பமாக அமைந்தது ராஜகுமாரி திரைப்படம். இதில் கதாகநாயகனாக பரிணமித்தார். இந்தப் படத்தின் மூலமாகத் தான் திரு என்.எஸ்.கே. கிருஷ்ணனைச் சந்தித்தார். என்.எஸ்.கே. கிருஷ்ணன் அரசியல் ஆர்வம் உள்ளவர் என்பதால் பெரியாரின் குடியரசினைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இன்னொரு அறிமுகமாக திரு. கருணாநிதியைச் சந்திக்கிறார். ராஜகுமாரி படத்தின் வசனக் கர்த்தாவான கருணாநிதி பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.
ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு பல வாய்ப்புக்கள் தொடர்கின்றன. திராவிட கட்சியின் தொடர்பு கொண்ட ஒருவரால், சிவாஜி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு வருகிறது. முதலில் ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் பின்னர் அந்த வாய்ப்பினை மறுத்துவிடுகிறார். சிவாஜி படத்தில் தான் முதல்முதலாக திரு சிவாஜிகணேசன் தனது திரை வாழ்வினைத் தொடர்கிறார். அதோடு திராவிடக் கட்சியிலும் கவனம் செலுத்துகிறார்.
1956 இல் இவர் நடித்த நாடோடி மன்னன் மிகவும் வரவேற்பை பெறுகிறது. மக்கள் மத்தியில் ஆதர்சன நாயகனாக மாறுகிறார் எம்.ஜி.ஆர். அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளால் எம்.ஜி.ஆர் சினிமா துறையில் விலக்க முடியாத நட்சத்திரமாக உயர்ந்தார். தனது படத்தினைத் தானே இயக்கி, தயாரிக்கவும் ஆரம்பித்தார். உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டின் வெற்றியும் எம்.ஜி.ஆரை அரசியல் வாழ்வில் கால் பதிக்க வைத்தது. ஒரே நேரத்தில் அரசியலிலும் சினிமாவிலும் தொடர்ந்து சரியான முறையில் கவனம் செலுத்தி வந்தார்.
சிவாஜி எம்.ஜி.ஆர் பனிப்போர்
மிகப்பெரிய அளவுக்கு வேறுபாடுகள் கொண்ட இருவருக்கும் இடையே தொடர்ந்து போட்டிகள் இருந்து கொண்டே இருந்தன. காரணம் இருவரும் சினிமா துறையில் விலக்கிவிட முடியாத நட்சத்திரங்களாக வலம் வந்ததுதான். ஒருவர் நடிப்பின் மூலமாகக் தன்னை நிரூபித்துக் கொண்டார். இன்னொருவர் மக்களின் ஜனரஞ்சக நாயகனாகவும் வணிக ரீதியான நாயகனாகவும் இருந்தார். அதோடு திராவிட கருத்தியலின் தாக்கம் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்ததோடு அண்ணாவின் நெருங்கிய வட்டத்துடன் இருவரும் தொடர்ந்து நீடித்தனர்.
எவ்வளவு வேறுபாடுகள், சண்டைகள் இருந்தாலும் பொது மேடைகளில் பார்க்கும்போது இருவரும் கட்டித் தழுவிக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்பதே முக்கியமான விஷயமாகக் கருதப்பட்டது. பின்னாட்களில் சிவாஜிகணேசன் தன்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். இதுவும் திமுக வட்டத்தில் எம்.ஜி.ஆர் முக்கியமான நபராக உருவாவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம்.
திமுக பரிமாணம்
அந்நாட்களில் முதுபெரும் தலைவர்களும் அறிஞர்களும் இடம்பெற்ற ஒரு பெரும் கூடமாக திமுக விளங்கியது . இந்தப் பின்னணியில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஆளுமையாகத் தன்னை வளர்த்துக் கொண்டது மிகவும் முக்கியமான விஷயமாகவே கருதப்படுகிறது. அண்ணாவின் கருத்துக்களிலும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்த அண்ணாவின் தம்பியாகவே வாழ்ந்தார் எனலாம். இருவருக்கும் நெருக்கமான உரையாடல்களும் இருந்தன.
1967 சட்ட மன்றத் தேர்தலில் பரங்கிமலை தொகுதியின் வேட்பாளராகக் களம் இறங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் தேர்தல் பணியில் ஒரு மாத காலம் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவருமாறு அண்ணா அவர்களால் அறிவுறுத்தப் பட்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த எம்.ஜி.ஆரை ஒரு நாள் இரவு எம்.ஆர்.ராதா அவர்கள் சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டார். நல்ல வேளையாக இருவரும் சிகிச்சைப் பெற்று திரும்பி வந்தனர். மருத்துவமனையில் வெறுமனே படுத்தவாறு புகைப்படத்திற்கு காட்சி அளித்தார் திரு. எம்.ஜி.ஆர். அந்த ஒரு படமே தமிழ்நாடு முழுக்க அனுதாப ஓட்டுக்களாக மாறி திமுக ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
எம்.ஜி.ஆரின் தனித்துவம்
எம்.ஜி.ஆரின் கவர்ச்சியும் ஆளுமையும் மக்களின் மனதை மிகவும் எளிதாகக் கவர்ந்தது. 1967 ஆம் ஆண்டின் சட்ட மன்றத் தேர்தலின் போது மேடையில் பேசிய அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆரின் முகத்தைக் காட்டினால் போதும் எனது கட்சிக்கு 30 ஆயிரம் ஓட்டுக்களை மிகவும் எளிதாகப் பெற்றுவிடலாம்’ என்று புகழ்ந்திருக்கிறார். அந்தளவுக்கு மக்களின் மனதில் புகழையும் ஈர்ப்பையும் பெற்றவராகத் திகழ்ந்தார். எம்.ஜி.ஆரின் முகத்தைக் காட்டினாலே போதுமானது நமது வெற்றி உறுதியாகிவிடும் என்று மேடையில் பேசியது மட்டுமல்லாமல் அந்தச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணம் என்பதை எப்பொழுதும் ஒப்புக்கொண்டிருந்தார் அண்ணா.
அண்ணாவின் இறப்புக்குப் பின்பு ஆட்சி கருணாநிதியின் கைகளுக்கு போவதிலும் மிகுந்த பங்கு வகித்தவர் எம்.ஜி.ஆர் தான். இதனை கருணாநிதி மிகவும் அழுத்தத்துடனே குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் தேர்தல் என்றாலும் மாநிலத்தில் தேர்தல் என்றாலும் இவரது கருணை இருந்தால் ஆட்சியைக் கட்டிலை அடைந்து விடலாம் என்ற அளவிற்கு மிகவும் உறுதி வாய்ந்த மனிதராக இருந்தார். அரசியலில் முதலமைச்சர் பதிவி ஏற்றதில் இருந்து எந்த வொரு சட்ட மன்றத் தேர்தலிலும் இவர் தோற்கவில்லை என்பதே இவரின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
திமுகவுடன் முரண்பாடு
திராவிடக் கட்சியில் பொருளாளராக மிக நீண்டகாலம் பணியாற்றினார். திமுக வின் முக்கிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்து தன்னை அரசியலில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். இதற்குப் பின்னர் தான் திமுகவுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு நிலையில் சிக்கல் முளைத்தது. கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை பதவியைக் கேட்டதாகவும் அரசியல் காரணங்களுக்காக அதனை கருணாநிதி மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் திமுக கட்சியினர் வைத்திருந்த சொத்து விவரங்களை கேள்விக் கேட்டு பொது மேடையில் எம்.ஜி.ஆர் அவர்கள் கேள்வி எழுப்பினார்.
கட்சி உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரின் கேள்விக்குப் பதில் அளிக்காத நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலைப்பாட்டில் இருந்தும் நீக்கிவிட்டனர். கட்சி உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் கொண்ட அறிக்கையை எம்.ஜி.ஆர் தமிழக கவர்னரிடம் வழங்கினார். அதனை கவர்னர் வாங்க மறுத்ததால் குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் திமுக உறுப்பினர்களின் முறைகேடான சொத்து விவரங்களைக் குறித்து விசாரணை செய்ய அரசு சர்க்காரிய கமிட்டியை அமைத்தது.
அதிமுக தோற்றம்
திமுகவுடன் மாறுபாடு கொண்டவுடன் அதிமுக கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் பயணம் செய்து திமுக கட்சி, ஊழல் கட்சி எனப் பிரச்சாரம் செய்தார். 1973 ஆம் ஆண்டு மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பாக திரு மாயத்தேவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தல் எம்.ஜி.ஆருக்கு இருந்த அளப்பரிய சக்தியை எடுத்துக் காட்டியது. திண்டுக்கல் வேட்பாளர் மாயத்தேவர் மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று திமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்குத் தள்ளினார்.
கட்சியைத் தொடங்கிய பின்னர் அண்ணாயிசம் என்ற பெயரில் கட்சிக் கொள்கை குறித்த அறிக்கையை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை (Emergency) நாடு முழுவதும் அனைத்து கட்சியினரும் எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் தனது கட்சியை இந்தியா முழுமைக்குமானது என அறிவிக்கும் விதமாக அஇஅதிமுக என்று பெயரையும் மாற்றி அறிவித்தார். அஇஅதிமுக என்பது ஏழை எளிய மக்களுக்கானது என்றும், அதன் அடிப்படை சமூக நீதியை கொண்டது என்றும் தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் சொன்னார்.
1977 ஆம் ஆண்டு தமிழகச் சட்ட மன்றத் தேர்தலில் பங்கேற்று பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றார். அன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தனது இறப்பு வரையில் தொடர்ந்து முதலமைச்சராகவே நீடித்தார் என்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆர் ஆட்சி சாதனைகள்
காமராஜர் காலத்திலேயே மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் இதனைச் சத்துணவு என்ற பெயரில் ஊட்டச் சத்து மிக்கதாக மாற்றி அமைத்ததோடு அதனை 12 ஆம் வகுப்பு வரையிலும் விரிவு படுத்தினார். இந்தத் திட்டத்தைப் பற்றிய ஆலோசனையின்போது அவரது கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். 12 ஆம் வகுப்பு வரை இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தினால் அரசின் கருவூலம் காலியாகிவிடும். இதனால் ஆட்சிக் கட்டில் கவிழவும் வாய்ப்புண்டு என எச்சரிக்கை செய்தனர். இருந்தாலும் அதைத் துணிச்சலாக செய்ததால் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார் எம்.ஜி.ஆர்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இருந்தே இடஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் நடைபெற்று வந்த ஒன்றுதான். பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதமாக மாற்றிய பெருமை நீதிக்கட்சிக்கே உரித்தானது. 31 சதவீதமாக இருந்த பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 50 சதவீதமாக மாற்றி உத்தரவிட்ட பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். அரசியல் வரலாற்றில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு உயர்வு மக்களின் மனதில் மிகவும் எம்.ஜி.ஆரை உயர்ந்தவராக மாற்றிக் காட்டியது எனலாம்.
கோவில்களில் அனைவரும் அர்ச்சராக இருக்கலாம் என்ற கோரிக்கையை ஒட்டி அமைக்கப்பட்ட மகாராஜன் குழு, எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் அமைக்கப்பட்டது. பின்னாட்களில் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சராக மாறுவதற்கான முதல் படியாகவே இந்த முன்னெடுப்பு இருந்தது என்றால் அது மிகையாகாது.
உள்ளாட்சி அமைப்புகள் கட்டப்படுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தினைக் கவனத்தில் எடுத்துக் கொண்டார். அனைத்துக் கிராமங்களையும் நிர்வாகத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு வசதியாக இவரது ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகளுக்குத் தனது சொந்த நிதியில் இருந்து உதவி அளித்தார் எம்.ஜி.ஆர். ஊர் பெயர்களில் சாதிப் பெயரை சேர்க்கக் கூடாது என அரசின் உத்தரவாகவே எம்.ஜி.ஆர் மாற்றினார். மேலும் மத்தியின் அரசியல் அமைப்புகளில் மாநிலங்களின் பங்கேற்பு குறைவாக இருந்த நிலைமையை எம்.ஜி.ஆர் மாற்றிக் காட்டினார்.
எம்.ஜி.ஆர் மீதான விமர்சனங்கள்
நாயணத்திற்கு எப்பொழுதும் இரண்டு பக்கங்கள் இருப்பது போலவே அரசியல், சினிமா என்ற இருபெரும் துறைகளிலும் ஆளுமை செலுத்திய எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்களிலும் சில புரியாத விஷயங்கள் இருக்கத்தான் செய்தன. சொந்த வாழ்க்கையில் எதிர்ப்பாராத விதமாக மூன்று திருமணங்களை செய்து கொண்டார். தனது படங்களில் மது அருந்துவது போன்ற காட்சியமைப்புகள் இருக்கக் கூடாது எனக் கவனமாகச் செயல்பட்ட அவரது ஆட்சியில்தான் மது ஒழிப்புக்கான தடை நீக்கப்பட்டது ஏன் இன்றுவரையிலும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஊழல் பெருமுதலாளிகளைத் துவைத்து எடுக்கும் படங்களில் நடித்தவர் தனது அரசியல் வாழ்வில் நடந்த எரிசாராய ஊழலைப் பற்றி அதிக கவனம் செலுத்த வில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகினார். கடுமையான தண்டைகளைக் கொடுக்கும் சட்டமான குண்டத் தடுப்புச் சட்டம் இவரது ஆட்சிக்காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. மேலும் நக்சலைட்டுக்களை ஒழிப்பதற்காக இவரது ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானவை என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் பெருமிதமான நடவடிக்கைகள்
மூகாம்பிகை பக்தராகவும் இந்து மதத்தில் பற்றுக்கொண்டவராகவும் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெரியாருக்கு நூற்றாண்டு விழாக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களையும் அவரது மொழிச் சீர்திருத்தத்தையும் எப்போதும் எம்.ஜி.ஆர் கொண்டாடியே வந்திருக்கிறார்.
இதய தெய்வம்
இந்திய அரசியல் வரலாற்றிலும் சரி, சினிமா வரலாற்றிலும் சரி எம்.ஜி.ஆரைப் போன்ற ஆளுமையை இன்னொரு முறை சந்திப்பது மிகவும் அரிதானதாகவே கருதப்படுகிறது. இந்திய அரசு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி சிறப்பு செய்துள்ளது. சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்துள்ளன. இதைவிட மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றால் எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலக்கட்டத்தில் அவருக்குக் கோவில் கட்டப்பட்டது என்பது மிகவும் முக்கியத்துவம் உடையது. இவரது அயராத உழைப்பு, மக்களிடம் காட்டும் நெருக்கம், தான் எடுத்துக் கொண்ட செயலில் காட்டும் ஆர்வம் போன்றவைதான் புகழின் உச்சிக்குக் காரணமாகியது.
பாமர மக்களின் வாழ்வில் செல்வாக்கை பெற்ற எம்.ஜி.ஆர் மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்று பல பெயர்களால் அழைக்கப்படாலும் இதய தெய்வம் எனும் போதுதான் அவரின் தகுதி முழுமை பெறுகிறது. ஏழை மக்களின் வாழ்வில் எழுச்சி நாயகனாகத் திகழும் திரு எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களின் மனதில் என்றும் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை ஏழைகளுக்கு எழுச்சி நாயகன்; முதலாளிகளுக்கு எமன்; தயாரிப்பாளனுக்கு லாபகரமானவன்; பெண்களுக்கு மதிப்பளிப்பவன்; எதிர்க் கட்சியினருக்கு சிம்ம சொப்பனம்; அரசியலில் வரலாறு படைத்தவன் எனச் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com