அமெரிக்கர்கள் நுழைய கூடாது என மெக்சிகோ போராட்டம்: தலைகீழாக மாறிய நிலை
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
’ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்று தமிழில் ஒரு பழமொழி கூறுவது உண்டு. அதைப்போல் மெக்சிகோ நாட்டவர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டின் வழியாக வரும் வேறு நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு நுழையக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும் மெக்சிகோ-அமெரிக்கா இடையே சுவர் கட்ட போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நிலைமை அப்படியே தற்போது தலைகீழ் ஆகியுள்ளது. தற்போது அமெரிக்க மக்கள் யாரும் மெக்சிகோவிற்குள் நுழையக்கூடாது என மெக்சிகோ மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப்பட்டவர்கள் அமெரிக்கா தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அண்டை நாடான மெக்சிகோவிற்கு கொரோனா வைரஸ் பயம் காரணமாக செல்வதாக தெரிகிறது.
இதனை அடுத்து மெக்சிகோ மக்கள் எல்லை அருகே போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்கு வருவதால் மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவி விடும் என்றும் அதனால் அமெரிக்கர்கள் மெக்சிகோவிற்குள் நுழையக்கூடாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவை அமெரிக்கா எச்சரிக்கை செய்த நிலை மாறி தற்போது அமெரிக்கர்களை மெக்சிகோ மக்கள் விரட்டும் அளவுக்கு மாறியுள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.