மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது..!
- IndiaGlitz, [Tuesday,December 03 2019]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி காலனியில் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பக்கத்தில் சாய்தளமான அமைப்பில் 50க்கும் மேற்பட்ட ஏழை கூலி தொழிலாளர்கள் வீடிகட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பங்களாவை விலைக்கு வாங்கிய ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணி பக்கத்தில் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் தனது வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க சிறிய அளவிலான பழைய சுவரை இடித்து அகற்றி விட்டு, பலமான அஸ்திவாரம் ஏதும் இன்றி அவசர கோலத்தில் 80 அடி நீளமும் 15 அடி உயரமும் கொண்ட கருங்கல் சுற்றுச்சுவரை அமைத்துள்ளார். தாழ்வான பகுதியில் இருந்து பார்த்தால் 20 அடி உயரம் இருக்கும் வகையில் அந்த சுவர் அமைந்திருந்தது. சுற்றுசுவரின் மேல், பூச்சு வேலைகள் ஏதும் மேற்கொள்ளாததால் அப்போதே அந்த சுவர் பிளவு பட தொடங்கி இருக்கின்றது.கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் ஏற்கனவே பலமில்லாமல் நின்ற அந்த கருங்கல் சுவர் மழை நீர் இறங்கி ஊறியதால் அதிகாலை நேரத்தில் ஒட்டு மொத்தமாக தாழ்வான பகுதிக்குள் சரிந்து விழுந்தது.
விழுந்த வேகத்தில் அந்த சுவற்றை யொட்டி தாழ்வான பகுதியில் அமைந்திருந்த அருக்காணி மற்றும் சிவகாமி ஆகியோரது குடும்பங்களை சேர்ந்த 4 வீடுகள் இடிந்து நொறுங்கி தரைமட்டமானது. இதில் சுடுமண் ஓடால் வேயப்பட்ட அந்த வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், தமிழ்நாடு மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் இறங்கினர். 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிணகூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கனமழை காரணமாக தனது ஊருக்கு செல்ல முடியாமல் தங்கள் உறவினர் வீட்டில் தங்கிய புளியம்பட்டியை சேர்ந்த ருக்மணி என்பவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையே பலியானவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து 17 பேரின் சடலங்களும் பிணக்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியானவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பலியானவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறினார்.
தரமான அஸ்திவாரமும், போதிய தூண்களும் இல்லாமல் மட்டமான சிமெண்டு கலவையால் கட்டப்பட்டதால் 80 அடி நீள கருங்கல் சுவர் அடியோடு சரிந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. இதே போல அந்த பகுதியில் 15 அடி உயரத்திற்கு தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர்களை இடிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இன்று சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.