பேருந்து ஸ்டிரைக் எதிரொலி: சென்னை மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு!
- IndiaGlitz, [Thursday,February 25 2021]
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பல பகுதிகளில் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இயங்கிவருகின்றன.
சென்னையில் காலையில் வழக்கமாக 200 பேருந்துகள் இயங்க இருக்கும் நிலையில் இன்று 80 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதாகவும் அதிமுக தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேருந்து போக்குவரத்து மிகவும் குறைந்து உள்ள காரணத்தினால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோ, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கணக்கில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி பேருந்து ஸ்டிரைக்கை கருத்தில் கொண்டு இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் ஐந்து நிமிட ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என்றும் தேவையை பொறுத்து மேலும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பகுதிகளில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து ஸ்டிரைக் இருந்தாலும் தடையின்றி பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.