கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு ஆபத்தா? நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Sunday,July 03 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டின் சில பகுதியை கைப்பற்ற சென்னை மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை இடையே 26.1 கிலோமீட்டர் புதிய மெட்ரோ பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் ஆல்வார்பேட்டை ரயில் நிலையம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற இருப்பதாகவும், இந்த கட்டுமான பணிக்கு கமல்ஹாசனுக்கு சொந்தமான வீட்டின் 170 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு மெட்ரோ நிறுவனம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்தமுறை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் போது விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு சொந்தமான அவருடைய குடும்பத்தின் பாரம்பரியமான வீட்டின் ஒரு பகுதியை மெட்ரோ நிர்வாகம் கைப்பற்ற நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.