சென்னையில் மழை நீடிக்குமா? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?
- IndiaGlitz, [Tuesday,October 05 2021]
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதன்படி சென்னை நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. மேலும் நகரின் சில பகுதிகளில் இப்போதும் கூட விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
இதையடுத்து “தென்கிழக்குப் பகுதியிலிருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று சென்னையை நோக்கி நகருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்“ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் “சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்“ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.