சமூக அக்கறை மிக்க மாஸ் படம்
தளபதி விஜய்யின் 61ஆவது படம், அவர் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் முதல் படம், ‘பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற தெறி’ படத்துக்குப் பின் இயக்குனர் அட்லியுடன் இணைந்திருக்கும் இரண்டாவது படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மூன்றாவது படம் என பல காரணங்களால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ வெளியாவதற்கு முன்பாகவே பல சாதனைகளைப் படைத்துவிட்டது. படம் எப்படி இருக்கிறது என்பதையும் வெளியான பின் சாதனை படைக்குமா என்பதையும் விமர்சனத்தில் காண்போம்.
மருத்துவத் துறையில் ஊழல் செய்த நான்கு பேர் கடத்திக் கொல்லப்படுகிறார்கள். கடத்துபவர் கைதுசெய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் ஃப்ளாஷ் பேக் விரிகிறது. மருத்துவர் மாறன் (விஜய்) ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் செய்பவர். இதனால் ஏழை மக்கள் அவரைக் கடவுளுக்கு இணையாகப் போற்றுகிறார்கள். ஒரு விருது வாங்குவதற்காக வெளிநாடு செல்கிறார் மாறன்.அங்கேயும் ஒரு பெரிய மருத்துவர் கொல்லப்படுகிறார்.
இந்தக் கொலைகளையும் கடத்தல்களையும் செய்தது. யார்? மாறனுக்கும் அவற்றுக்கும் என்ன தொடர்பு? கொலைகளுக்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் விடை சொல்கிறது படத்தின் மீதிக் கதை.
’கத்தி’, ‘தெறி’ படங்களின் வரிசையில் ‘மெர்சல்’ படமும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பேசுகிறது. மருத்துவத் துறையில் நிகழும் ஊழலும் அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதும் இந்தப் படத்தில் சமூகப் பொறுப்புடனும் போதுமான அக்கறையுடனும் அலசப்படுகின்றன. இதை அடிநாதமாக வைத்து விஜய் ரசிகர்களையும் பொதுவான ரசிகர்களையும் திருப்திபடுத்தும் பக்கா மாஸ் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லி. திரைக்கதையில் விஜயேந்திர பிரசாத், வசனத்தில் ரமணகிரிவாசன் ஆகியோர் இதைச் சாதிப்பதில் அட்லிக்குப் தக்க துணைபுரிந்திருக்கிறார்கள்.
விஜய்க்கு எத்தனை வேடங்கள் என்பதிலேயே படத்தில் ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அது வெளிப்படும் இடைவேளைக்கு முந்தைய காட்சி ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறது. இரண்டாம் பாதியில் கிராமத் தலைவராக வரும் அப்பா விஜய்யின் பகுதி இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அதே நேரத்தில் விஜய் ரசிகர்களைத் திருப்திபடுத்துவதற்கான் மாஸ் காட்சிகளுடனும் இருக்கின்றன.
வணிக நோக்கம் கொண்ட மருத்துவர்களைத் தோலிருப்பதோடு, அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைகளையும் துணிச்சலாக அம்பலப்படுத்துகிறது ‘மெர்சல்’. இது தொடர்பான வசனங்களில் மருத்துவத் துறையின் சமகால அவலங்களை சுட்டிக் காண்பித்து விமர்சித்திருப்பதும் ஆளும் அரசுகளையும் விமர்சித்திருப்பதும் இயக்குனரின் துணிச்சலைக் காண்பிக்கிறது. இந்த வசனங்களை விஜய் போன்ற ஒரு மாஸ் நாயகன் பேசும்போது அவை மேலும் வலுப்பட்டு ரசிகர்களின் ஆதங்கத்தை ஆக்ரோஷமாக வெளிப்படவைக்கின்றன.
கதை நிகழ்வுகள் பல பழைய தமிழ்ப் படங்களை நினைவுபடுத்துவது, படத்தின் நீளம் அதிகமாக இருப்பது, சில காட்சிகளில் மெலோட்ராமாத்தன்மை அதிகமாக இருப்பது ஆகியவை படத்தின் குறைகள். சில இடங்களில் இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதையின் விறுவிறுப்பில் அவை அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன.
சேவை மனப்பான்மை மிக்க மருத்துவர், சாதுர்யமும் வீரமும் நிறைந்த மேஜிக்மேன், ஊருக்கு நல்லது நினைத்து வழிநடத்தும் கிராமத் தலைவர் என்ற மூன்று வேடங்களையும் சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். மூன்று பாத்திரங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பைத் தந்திருக்கிறார். குறிப்பாக மேஜிக் கலைஞருக்கான உடல் மொழியையும் செய்கைகளையும் அழகாகவும் நம்பகமாகவும் கொண்டுவந்திருக்கிறார். இவற்றோடு, வழக்கம்போல் நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷகளிலும் மனதைக் கொள்ளைகொள்கிறார்.
நாயகிகளில் நித்யா மேனனுக்கு சற்று கனமான வேடம். அதைக் குறையின்றி நடித்துக்கொடுத்திருக்கிறார். ‘தெறி’ படத்தைப் போலவே இதிலும் விஜய்-சமந்தா கெமிஸ்ட்ரியும் அவர்களுக்கிடையிலான காதல் காட்கிகளும் அழகாக இருக்கின்றன. ஒரே ஒரு டூயட் பாடலைத் தவிர காஜல் அகர்வாலுக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.
மருத்துவத் துறையை ஒரு வணிகமாகப் பார்த்து லாபத்துக்காகப் பல கொலைகளைச் செய்யும் வில்லன் டேனியல் அரோக்கியராஜாக எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் உச்சரிக்கும் வசனங்களும் அவற்றை அவர் உச்சரிக்கும் விதமும் பலத்த கைதட்டல்களைப் பெறுகின்றன. அதோடு ஃபிளாஷ் பேக் காட்சிகளில் அவரது கெட்டப்பும் நடிப்பும் சிறப்பாக உள்ளன. வைகைப்புயல் வடிவேலு நகைச்சுவையை விட எமோஷனல் காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். யோகிபாபு வரும் ஒரு சில காட்சிகளில் நன்கு சிரிக்கவைத்திருக்கிறார். காவல்துறை விசாரணை அதிகாரியாக சத்யராஜ், விஜய்யின் வளர்ப்பு அம்மாவாகக் கோவை சரளா ஆகியோருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பில்லை. கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்திருக்கின்றனர்.
ரகுமான் இசையில் ‘நீதானே’ மனதை மயக்க, ‘ஆளப் போறான் தமிழன்’ ஆட்டம்போட வைக்கிறது. ‘மாச்சோ’ பாடல் லொகேஷனுக்காகவும் ‘மெர்சல் அரசன்’ பாடல் விஜய்யின் நடனத்துக்காகவும் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசை பொருத்தமாக உள்ளது. ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் ஐரோப்பிய நாடுகளின் குளுமையும் மதுரை கிராமத்தின் வெம்மையும் இயல்பாகப் பதிவாகியுள்ளனர்.
மொத்தத்தில் ‘மெர்சல்’ சமூக அக்கறை நிரம்பிய ஒரு பக்கா மாஸ் படமாக இருப்பதோடு விஜய் ரசிகர்களுக்கும் பொதுவான சினிமா ரசிகர்களுக்குமான நல்ல தீபாவளி விருந்தாகவும் அமைந்துள்ளது.
Comments