ஜிஎஸ்டிக்கு எதிரான 'மெர்சல்' வசனம் சரியா? தவறா?
- IndiaGlitz, [Friday,October 20 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல சோதனைகளை சந்தித்த நிலையில் தற்போது ரிலீசுக்கு பின்னரும் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
திரைப்படம் என்பது ஒரு கலைஞனின் படைப்பு. அந்த படைப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்ட சென்சார் அதிகாரிகள் இருக்கின்றது. சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்தின் கதையை மாற்று, வசனத்தை நீக்கு என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு கூறினால் கலைஞனின் படைப்பு சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்
இதுதான் 'மெர்சல்' படத்தின் பிரச்சனையாக இருந்து வருகிறது. சமிபத்தில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிமுறைக்கு நாட்டு மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அமல்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் மாநிலங்கள் தனியாக வரியை நியமித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அத்தியாவசிய உயிர்காக்கும் பொருட்களுக்கு அதிக வரியும், தங்கம் போன்ற ஆடம்பர பொருளுக்கு குறைந்த வரியும் விதித்துள்ளதை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மட்டுமின்றி பாஜகவின் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மக்களின் மனநிலையை வசனமாக ஒரு திரைப்படத்தில் வைத்தது தவறா?ஒவ்வொரு சாமானியனும் நிஜ வாழ்க்கையில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியைத்தான் 'மெர்சல்' படத்தில் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு ஆக்கபூர்வமான பதில் சொல்வதை விடுத்து, படக்குழுவினர்களை மிரட்டுவது உண்மையான ஜனநாயகத்திற்கு அழகா? என்று ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் இந்த கேள்வியை எழுப்புவதால் தான் இன்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நலன் ஒன்றுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் நடவடிக்கை இருந்தால் மக்கள் தக்க நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்பதே அனனவரின் கருத்தாக உள்ளது.