விஜய்யை திட்டுவதை நிறுத்திவிட்டு அவர் சொன்ன கருத்தை சிந்தியுங்கள்: பாஜக எம்பி

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

கடந்த தீபாவளி அன்று வெளியான தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு தமிழக பாஜக பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜக பிரமுகரும், எம்பியும், ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சத்ருஹன்சின்ஹா இதுகுறித்து தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்

'மெர்சல்' படத்தில் எழுப்பப்பட்ட நியாயமான கேள்விகளான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற கருத்துக்களை பாஜகவினர் ஏன் எதிர்க்க வேண்டும்? மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அந்த கருத்தை கூறிய நடிகரை திட்டுவது சிறிதும் பொருத்தம் இல்லாத செயல்.

நாட்டு மக்களுக்கு இலவச மருத்துவம் தர வேண்டும் என்று விஜய் கூறிய கருத்தில் என்ன தவறு உள்ளது? ஒரு பவர்புல் நடிகர் கூறிய கருத்தை வரவேற்று அதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். மெர்சல் குறித்து பிரதமர் மற்றும் மூத்த தலைவர்கள் எதுவும் கூறாத நிலையில் ஒருசிலர் தாங்கள் கட்சிக்கு உண்மையாக இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் செய்ததன் விளைவே இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம்.

விஜய் கூறிய இலவச மருத்துவம் குறித்து அரசு சீரியஸாக சிந்திக்க வேண்டும். மேலும் ஆரம்பத்தில் இருந்தே பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு என்று கூறி வருபவர்களில் நானும் ஒருவர். எனவே இந்த நடவடிக்கைக்கு மக்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பது பெரிய குற்றம் ஆகாது. மேலும் இந்த படம் ஹிட்டானதற்கு எங்கள் கட்சியை சேர்ந்த சிலரும் ஒரு காரணம் என்பதால் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பாஜகவுக்கு நன்றி கூற வேண்டும் என்று சத்ருஹன்சின்ஹா கூறியுள்ளார்.