எதிரிகள் இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும். 'மெர்சல்' விழாவில் விஜய்
- IndiaGlitz, [Monday,August 21 2017]
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. முதல்முறையாக தனியார் தொலைக்காட்சி, யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர், போன்றவைகளில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் கோடிக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
பொதுவாக விஜய் மேடையேறினாலே ரசிகர்களுக்கு சில அறிவுரைகள், குட்டிக்கதைகள் மற்றும் சில சுவாரஸ்யங்கள் இருக்கும். இந்த நிகழ்ச்சியிலும் அது இருந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் விஜய் பேசியதாவது:
100 வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25 வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்க ன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். எதிர்மறை கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள்
இந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக நம்மை வாழவிட மாட்டார்கள், அதையெல்லாம் தாண்டி முட்டி மோதி தான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் நம்மை பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும். ஒருசிலருக்காவது நம்மை பிடிக்காமல் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒரு குட்டி கதை சொல்கிறேன். எல்லா மேடையிலும் ஒரு குட்டி கதை சொல்வதாக தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். ஒரு இதய அறுவை சிகிச்சை டாக்டர் கார் மெக்கானிக் ஷாப்பில் தனது காரை சர்வீஸ் செய்ய சென்றிருந்தார். அப்போது காரை ரிப்பேர் செய்யும் மெக்கானிக் அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் டாக்டரிடம் ஒரு கேள்வி கேட்டார்.
நானும் உங்களை போலவே காரில் உள்ள எல்லா பாகங்களயும் ரிப்பேர் செய்கிறேன், வால்வுகளில் உள்ள அடைப்பை நீக்குகிறேன், எல்லா ஸ்பேர் பார்ட்ஸையும் கழட்டி சரியாக மாட்டுகிறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் பணம், புகழ் எல்லாம் அதிகம் கிடைக்கிறதே ஏன்? என்று கேட்டாராம், அதற்கு டாக்டர் 'இதையெல்லாம் நீங்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது செய்து பாருங்கள், அப்போது உனக்கு இந்த கஷ்டம் புரியும்' என்றாராம்.ஒரு மிகப்பெரிய தத்துவத்தை ஒரு டாக்டர் மிக எளிமையாக கூறியதை தான் வியந்ததாக விஜய் 'மெர்சல்' மேடையில் கூறினார்.
இறுதியில் 'துப்பாக்கி என்றால் தோட்டா இருக்கணும், கத்தி என்றால் ஷார்ப்பா இருக்கணும் அதுமாதிரி மெர்சல் என்றால் மிரட்டலா இருக்கணும்' என்று ஒரு பஞ்ச் டயலாக்கை கூறிவிட்டு விஜய் தன்னுடைய உரையை முடித்தார்.