Download App

Merku Thodarchi Malai Review

'மேற்குத்தொடர்ச்சிமலை': மேன்மையான படம்

விஜய்சேதுபதியின் தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த 'மேற்குத்தொடர்ச்சிமலை' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பெருமை பெற்ற படம். பிரமாண்டங்கள், கமர்ஷியல் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு யதார்த்தமான மலைவாழ் மக்களின் கதையை கூறும் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

'மேற்குத்தொடர்ச்சிமலையில் உள்ள தமிழ்நாடு-கேரளா எல்லையில் தினமும் கீழே இருந்து மலைக்கு மேல் சுமைகளை எடுத்து செல்லும் கூலி வேலை செல்லும் ரங்கசாமியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. சொந்தமாக ஒரு நிலம் வாங்கிவிட்டுத்தான் திருமணம் என்ற வைராக்கியம் உள்ள ரங்கசாமி, ஒரு நிலத்தை வாங்கும் நிலையில் அந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் நிலத்தை விற்க எதிர்ப்பு தெரிவிப்பதால் கனவு நனவாகாமல் போகிறது. அதன் பின்னர் அம்மா மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ளும் ரங்கசாமி, கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு நிலத்தை வாங்க முயற்சிக்கின்றார். எதிர்பாராத ஒரு சம்பவத்தால் சேர்த்து வைத்த பணம் முழுவதும் கையை விட்டு போகிறது. தனது வாழ்நாள் சம்பாத்தியம் முழுவதும் போய்விட்டதால் மனமொடிந்து போகும் ரங்கசாமிக்கு அந்த நிலத்தை வாங்க உதவுகிறார் அதே ஊரை சேர்ந்த ஒருவர். அந்த நிலத்தில் விவசாயம் செய்ய விதை மற்றும் உரம் கொடுத்து உதவுகிறார் இன்னொருத்தர். அதன் பின்னர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் ரங்கசாமியின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம். அதனால் ஏற்படும் விளைவுகள், சோகங்கள்தான் இந்த படத்தின் மீதிக்கதை

ரங்கசாமியாக நடித்திருக்கும் அந்தோணி என்ற புதுமுகம் இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அப்படியே கேரக்டரில் வாழ்ந்திருக்கின்றார். இந்த கேரக்டரில் புதுமுகம் இல்லாமல் பிரபல நடிகர் நடித்திருந்தால் நிச்சயம் படம் சொதப்பியிருக்கும். அவருடைய இயல்பான நடை, பேச்சு, மனைவி மகனிடம் காட்டும் பாசம், பணம் பறிபோன பின்னர் நொறுங்கி விழும் யதார்த்தம், என இந்த நடிகருக்கு எத்தனை பாராட்டு கொடுத்தாலும் தகும் என்ற அளவில் நடிப்பு உள்ளது.

ரங்கசாமியின் மனைவியாக காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். எந்தவித அலட்டலும் இல்லாமல் ஒரு கிராமத்து பெண்ணாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே 'ஜோக்கர்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள அத்தனை கேரக்டர்களையும் மிக இயல்பாக நடிக்க வைத்துள்ள இயக்குனர் லெனின்பாரதிக்கு ஒரு சபாஷ்

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் தேனாக இனிக்கின்றது. குறிப்பாக 'அந்தரத்தில் தொங்குதம்மா...சொந்தம் எதுவும் இல்லாத ஏழை வாழ்க்கை' என்ற பாடல் நெகிழ்ச்சியை தருகிறது. இந்த படத்திற்கு இசைஞானியை தவிர வேறு யாராலும் பின்னணி இசையமைக்க முடியாது என்ற அளவில் கதைக்கேற்ற அருமையான பின்னணி இசை. ஒருசில இடங்களில் பின்னணி இசையே கொடுக்காமல் சைலன்ஸில் விட்டதுதான் இசைஞானியின் மிகப்பெரிய பலம்

இந்த படத்தின் நாயகர் என்றே ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அவர்களை கூறலாம். போக்குவரத்து வசதி இல்லாத மலையில் இவ்வளவு அருமையாக ஒரு யதார்த்தமான ஒளிப்பதிவு, மேற்குத்தொடர்ச்சிமலையின் அழகு, கம்பீரம், மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை காண்பிக்கும் விதம் என ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் இந்த படத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றார். உலகத்தரத்திற்கு நமது தமிழ் சினிமா சென்றுவிட்டது என்பதை பெருமையாக சொல்லி கொள்ளலாம். அதேபோல் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் பணியும் மிகச்சிறப்பாக உள்ளது.

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஒருசில இயக்குனர்களே உள்ளனர். அந்த பட்டியலில் லெனின் பாரதியை அவர்களை தாராளமாக இணைத்து கொள்ளலாம். 100 கோடி, 200 கோடியில் ஒரு பிரமாண்டமான படத்தை இயக்குவதைவிட இப்படி ஒரு படத்தை இயக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். நகரத்து வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத மலைவாழ் மக்கள், இப்படியும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை இயக்குனர் அருமையாக பதிவு செய்துள்ளார். இயற்கையான மழை, வெள்ளேந்தியான மக்கள், மணம் வீசும் வசனங்கள் என சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி பார்வையாளர்கள் தியேட்டரில் இருப்பதையே மறந்து, கேரக்டர்களுடன் சேர்ந்து மலையேறுவது போல் உள்ளது இந்த படம். வருடக்கணக்கில் நகரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கின்றார் என்பது கூட தெரியாது. ஆனால் தேடி வந்து உதவும் மக்கள், எதிர்பார்ப்பு இன்றி உதவி செய்யும் குணம், வெளியூரில் இருந்து வாழ வந்தவரை வரவேற்று அவரை பெரிய ஆளாக்கும் குணம், அந்த நபர் தனக்கு வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு செய்யும் கைமாறு, இதற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் தொழிலாளர்களை பயன்படுத்தி செய்யும் அரசியல் என இயக்குனரின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. 

ஒரு விவசாயி எவ்வளவுதான் உழைத்தாலும் கடைசி வரை முன்னேற்றம் இல்லாமல் உள்ளதையும், விவசாயிக்கு உரம் விற்றவர் ஒருசில ஆண்டுகளில் உச்சத்திற்கு செல்லும் யதார்த்தத்தை இதைவிர உண்மையாக யாராலும் கூற முடியாது. மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணம் தொலைந்துவிட்டதால் பைத்தியமாக மாறும் கிழவி கேரக்டர் முதல் கணக்குப்பிள்ளை, ரங்கசாமிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் கேரக்டர் வரை ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர் லெனின். குறிப்பாக மூட்டை சுமந்து வரும் பெரியவர் ஒருவர் ரத்தவாந்தி எடுத்தபோதும் விடாப்பிடியாக நான் தான் அந்த மூட்டையை தூக்கி வருவேன் என்று பிடிவாதம் செய்து பேசும் வசனங்கள் நூறு பஞ்ச் டயலாக்குகளுக்கு சமம். மலையேறுபவர்கள் ஒரு கல்லை எடுத்து சாமிக்கு செலுத்தும் காணிக்கை உள்பட இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பாராட்டி எழுதிக்கொண்டே இருக்கலாம்.  ஆனால். என்னதான் யோசித்து யோசித்து பல பக்கங்கள் எழுதினாலும் இந்த காட்சிகளை திரையில் பார்க்கும் அனுபவமே தனிதான். எனவே 'மேற்குத்தொடர்ச்சிமலை' ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு மேன்மையான படம்

இப்படி ஒரு யதார்த்தமான படத்தை தயாரித்த விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள். இந்த படத்தால் தனக்கு லாபம் கிடைக்குமா? என்பதை சிறிதளவும் யோசிக்காமல் இப்படி ஒரு கதை ஒவ்வொரு நபருக்கும் சென்று சேர வேண்டும் என்ற தயாரிப்பாளரின் உயர்ந்த மனதுக்கு ஒரு சபாஷ். 
 

Rating : 4.0 / 5.0