மெர்க்குரி: ஒரு மெளனத்தின் அலறல்
வசனமே இல்லாமல் ஒரு திரைப்படம் இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. முகபாவம், காட்சி அமைப்பிலேயே ஒரு கேரக்டர் என்ன சொல்ல வருகிறார் என்பது பார்வையாளர்களுக்கு புரிய வேண்டும். கமல், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய 'பேசும் படம்' திரைப்படம் இதற்கு ஒரு உதாரணம். இந்த படம் ஊமைப்படம் என்ற உணர்வே ஏற்படாத வகையில் இருந்தது என்பதும், இம்மாதிரியான படத்திற்கு உயிர்நாடி இசை என்பதை புரிந்து அந்த படத்தின் இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் மிக அருமையாக இசையமைத்திருப்பார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இதே பாணியில் இன்று வெளியாகியுள்ள படம் தான் கார்த்திக் சுப்புராஜின் த்ரில்லர் படம் தான் 'மெர்க்குரி. இந்த படம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதை பார்ப்போம்
வாய்பேச முடியாத காது கேட்காத ஐந்து நண்பர்கள் பிக்னிக் செல்கின்றனர். இவர்களில் ஒரு காதல் ஜோடியும் உண்டு. ஐவருக்கும் இடையே மெளன மொழியில் தொடங்கும் கொண்டாட்டம் சில நிமிடங்களில் விபரீதமாக மாறுகிறது. இரவில் காரில் அவர்கள் ஐவரும் வெளியில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து நடந்து விடுகிறது. இந்த விபத்திற்கு பின்னர் நடக்கும் விபரீதங்களே மீதிக்கதை
பிணமாக அறிமுகமாகும் பிரபுதேவா, பின்னர் நண்பர்கள் ஐவரையும் வேட்டையாடுவது த்ரில்லாக உள்ளது. பிரபுதேவாவை படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதற வைத்துள்ளார் இயக்குனர். பிரபுதேவாவின் நடிப்பு ஓகே என்றாலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போலவும் தெரிகிறது.
ஐந்து நண்பர்களில் நாயகி இந்துஜாவின் நடிப்பு ஓகே. காதலை பகிர்வது, விபத்து நடந்த பின்னர் துடிதுடிப்பது, கடைசியில் என்ன நடந்தது என்பதை சைகை மொழியில் பிரபுதேவாவுக்கு விளக்குவது உள்பட முகபாவனை மிக அபாரம். மற்ற நால்வரிடமும் இன்னும் கொஞ்சம் நன்றாக வேலை வாங்கியிருக்கலாம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஒருசில காட்சிகளில் நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் பார்வையாளர்களுக்கு ஒரு ஆறுதல்
வாய்பேச முடியாத காது கேட்க முடியாத மெளனத்தை மட்டுமே உணரும் ஐந்து பேர்களுக்கும், ஓசையை மட்டுமே கேட்கும் பார்வை இல்லாத ஒருவனுக்கும் இடையே நடக்கும் தவறான போர் தான் இந்த மெர்க்குரி என்ற இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் கான்செப்ட் மிக அருமை . Silence is the most powerful scream என்ற சப்டைட்டிலை டைட்டிலுடன் போடும் இயக்குனர் முதல் பாதியில் கேரக்டர்கள் பேசும் வசனங்களையும் ஏன் சப்டைட்டில் போட்டார் என்று தெரியவில்லை. ஒரு மெளன மொழி படத்தில் கேரக்டர்களின் கண்கள் தான் வசனமே தவிர, சப்டைட்டில் போடுவது சரியா? என்பதை இயக்குனரின் பார்வைக்கே விட்டுவிடலாம். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வரும் சமூக கருத்து இறுதியில் எத்தனை பேருக்கு புரிந்தது என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில் இந்த கருத்துக்கும் படத்தில் உள்ள காட்சிகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக குறைவு.
வசனமே இல்லாத ஒரு மெளனப்படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பதை சந்தோஷ் நாராயணன் உணர்ந்தாரா? என்று தெரியவில்லை. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசை இரைச்சலாக உள்ளது. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கலாம்.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, உண்மையில் இந்த படத்தின் ஹீரோ. ரம்மியமான ஆரம்ப காட்சிகளை அடுத்து மொத்த படமும் ஒரு பழைய தொழிற்சாலைக்குள் நடக்கின்றது. அந்த காட்சிகளில் திரு மிக அபாரமாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எடிட்டர் விவேக் ஹர்சன் இன்னும் கொஞ்சம் கத்தரியை பயன்படுத்தியிருக்கலாம். நண்பர்கள் நால்வரும் பிணத்தை தூக்கி கொண்டு செல்லும் காட்சிகள் கொஞ்சம் நீளம். ஆனால் 108 நிமிட படத்தில் இன்னும் கட் செய்துவிட்டால் குறும்படமாக மாறிவிடும் ஆபத்தை உணர்ந்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்
மொத்தத்தில் ஒரு சமூக கருத்தை திரில்லாக கொடுக்க கார்த்திக் சுப்புராஜ் எடுத்த முயற்சிக்காக ஒருமுறை பார்க்கலாம்.
Comments