கடலூர் துறைமுகத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை துரித வேகத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகர் பகுதிகளில் சாலை, மேம்பாலம், ரயில்வே போன்ற கட்டிட மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிகப் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
கொரோனா பேரிடரால் பல விதிமுறைகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தக் காலக்கட்டத்தை முறையாகப் பயன்படுத்தி தமிழக அரசு பல்வேறு சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதில் சாலை, போக்குவரத்து, ரயில்வே, ஏரி, குளம், அணைக்கட்டு மேம்பாடு, நீர்த் தேக்கங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் துரித வேகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 32 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம் எனப் பல மாவட்டங்களில் தடுப்பு பணிகளை நேரில் ஆய்வுசெய்த முதல்வர் அம்மாவட்டங்களில் நிலுவையில் இருந்த பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் புதிதாக அமையவிருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இந்த ஆய்வுப் பணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்த தமிழக முதல்வர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் அப்பகுதியில் நிறைவுற்ற பல திட்டப் பணிகளைப் பொது பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்திருக்கிறார். அதில் 25 கோடி மதிப்பிலான முடிவுற்ற 33 புதிய திட்டப்பணிகள் தற்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பசுமை வீடு திட்டத்திற்கான நிதி உதவி வழங்கும் திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார்.
மேலும் கொரோனா பாதிப்பினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முதல்வர் காணொலி காட்சி மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம், உணவு உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதைத்தவிர அப்பகுதியில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயப் பணிகளைக் குறித்து அதன் கூட்டமைப்பு குழுத் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
கொரோனா ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்ட முதல்வர் செய்தியாளர்களிடம், முலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் இருந்து 56,952 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் இவற்றில் 38,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். குறைதீர் திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த 9,965 பேருக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜில் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களில் 1,04,521 வீடுகளுக்கு ரூபாய் 84.33 கோடி செலவில் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 812 கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் 652 குடியிருப்புகளுக்கு ரூபாய் 479 கோடி செலவில் ஒப்பந்தப் புள்ளி போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கடலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூபாய் 678 கோடி இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கடலூர் துறைமுகம் ரூபாய் 135 கோடி செலவில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் கடலூரில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கடலூர் மாவட்ட திட்டப்பணிகளைக் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments