காங்கோவில் பரவும் புதிய கொள்ளை நோய்… எகிறும் உயிரிழப்பால் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Thursday,September 09 2021]
காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் தற்போது பாக்டீரியாவால் ஏற்படும் “மெனுஞ்சைத்திஸ்” (Meningitis) எனும் நோய் பரவி வருகிறது. இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த நோய் மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவாகும் வாய்ப்புக் கொண்டது என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் உலகம் முழுக்கவே பல வேறு நோய்களும் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் காங்கோ குடியரசு நாட்டில் தற்போது பாக்டீரியாவால் பரவும் மெனுஞ்சைத்திஸ் நோய் மக்களைத் தாக்கி வருகிறது. இந்நிலையில் பழமை மாறாத காங்கோ மக்கள் சூனியம் வைப்பதால்தான் இந்நோய் வருவதாக நினைத்துக் கொண்டு நோய்க்கான அறிகுறி தென்படும்போதே அந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் சென்று விடுகின்றனர்.
இதனால் மெனுஞ்சைத்திஸ் நோய்ப் பரவலின் வேகம் தற்போது அதிகரித்து 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் செனகல் முதல் எத்தோப்பியா வரையுள்ள 26 நாடுகளில் இந்த மெனுஞ்சைத்திஸ் நோய்க்கான பெல்ட் இருப்பதாக உலகச்சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அதிகப் பாதிப்பு கொண்ட காங்கோவின் ஷோபோ மாகாணத்தில் இந்த நோய் குறித்து அரசாங்கம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மெனுஞ்சைத்திஸ் நோயானது காங்கோவில் இதற்கு முன்பே பலமுறை நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுவும் குறிப்பாக ஜனவரி முதல் ஜுலை வரையிலான உலர்வான பருவத்தில்தான் இந்நோய் பரவும் என்றும் கூறுகிறார்கள். உயிரிழப்பை எளிதாக ஏற்படுத்திவிடும் இந்நோய் தொற்றிய ஒருவரின் சுவாச, தொண்டை சுரப்பிகளில் இருந்து தெறிப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.