எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த படத்திற்கு வரிவிலக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை..!

  • IndiaGlitz, [Sunday,December 22 2024]

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் கூரன் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டார். விலங்குகள் நல ஆர்வலரான இவர், இந்த விழாவில் பேசிய போது, இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியா முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும்.

இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகும் என்று நம்புகிறேன். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்குகள் நல ஆர்வலர்களும் இதை பார்க்க வேண்டும். நாமும் இந்த படத்தை பார்க்க வேண்டும். இது ஒரு பிரச்சார படம் அல்ல, நகைச்சுவை கலந்த கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளை கூறுகிற இந்த படத்திற்கு வரிவிலக்கு வழங்க அரசை கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

மேனகா காந்தியின் கோரிக்கையை அடுத்து, கூரன் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.