சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறக்கும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி பிறந்த நாள் அன்று திறக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு வரும் புதியவர்கள் சிவாஜியின் நடிப்பை அறிந்து கொள்ளும் வகையில் இந்த மண்டபம் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மணிமண்டபத்தின் உள்ளே சென்றாலே ஒரு கலைக்கோவிலுக்கு செல்லும் உணர்வு ஏற்படும் வகையில் இந்த மணிமண்டபம் அமைந்திருப்பதாக சிவாஜி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மணிமண்டபம் சிவாஜியின் 90வது பிறந்த நாளான வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றைய தினமே சென்னை மெரீனாவில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலையும் மணிமண்டபத்தில் நிறுவப்படும் என தெரிகிறது. இந்த மணிமண்டப திறப்புவிழாவிற்கு ரஜினி, கமல் உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.