Download App

Mehandi Circus Review

மெஹந்தி சர்க்கஸ் -  நெஞ்சை கவரும் தொன்னூறுகளின் காதல் கதை 

குக்கூ , ஜோக்கர் போன்ற ஆழமான சமுதாய அக்கறை கொண்ட படங்களின் இயக்குனர் ராஜு முருகன் கதை மற்றும் வசனம் எழுத அவரின் சகோதரர் சரவணா ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இந்த மெஹந்தி சர்க்கஸ் நம்மை தொண்ணூறுகளுக்கு கூட்டி சென்று ஒரு ஆழமான காதல் கதையை சொல்ல முயற்சித்திருக்கின்றனர். நல்ல படமான இதை வெகுஜன மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்) ஒரு நடுத்தர வயது ஆன் கொடைக்கானலில் குடியும் கையுமாக தொண்ணூறுகளின் பாடல்களில் லயித்து தொன்னூறுகளிலேயே உறைந்து போய் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை தேடி நிஷா என்ற இளம்பெண் மஹாராஷ்டிராவிலிருந்து வருகிறாள். வந்தவள் அவள் தாய் சாகும் தருவாயில் இருப்பதாக கூற அவர்களுடன் பயணிக்கிறார். கதை பின்னோக்கி நகர ராஜ கீதம் என்கிற பாடல் காஸட் கடை நடத்தும் ஜீவா அங்கு பாடல்கள் மூலமே பலருக்கு ஜாதி மாறி காதல் வரவும் ஓடி சென்று கல்யாணம் செய்வதற்கும் உதவியாக இருக்கிறார். அங்கு மெஹந்தி சர்க்கஸ் வர சர்க்கஸ் முதலாளியின் பெண் மெஹந்தி (ஸ்வீதா திரிபாதி ) மீது கண்டதும் காதல் கொள்கிறான் ஜீவா. கொஞ்ச நாள் கழித்து அவளும் காதலை ஏற்க பெண்ணின் தந்தை அவள் உயிராகிய ஆபத்தான ஒரு சர்க்கஸ் விளையாட்டை கற்று கொண்டால் அவளை திருமணம் செய்யலாம் என்று கூறுகிறார். ஜீவாவின் ஜாதி வெறி பிடித்த தந்தையோ ஆட்களை வைத்த்து அனைவரையும் காயப்படுத்துகிறார். பிரிந்த பிறகு மெஹந்தி என்ன ஆகிறாள் அவள் மகளுடன் செல்லும் ஜீவா தன் காதலியை சந்திக்கிறாரா மேலும் பல முடிச்சுகளுக்கு  விடை கிடைத்ததா என்பதே மீதி கதை. 

பழைய நவரச நாயகன் கார்த்திகை நினைவு படுத்தும் தோற்றம் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் அறிமுக படத்திலேயே அசத்தியிருக்கிறார். சிறு வயது  துடுக்கு தனமான நடிப்பாகட்டும் பின் நடுத்தர வயது ஒப்பனைக்கேற்ப படு இயல்பாக செய்து கவர்கிறார். காதலியின் மீது கத்தி வீசும்போது பதறுவதாகட்டும் அதுவே கடைசியில் எந்த சலனமும் இன்றி வீசுவதாகட்டும் ரங்கராஜ் கோலிவுட்டுக்கு நல்ல வரவு. ஸ்வீதா திரிபாதி மெஹந்தி கதாபாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு அவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலனை தன் மீது கத்தி வீசும்படி கண்களாலேயே தைரியம் சொல்லும் ஒரு இடம் போதும் அவர் நடிப்பு திறமைக்கு சான்று. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சர்ச் பாதிரியார்களின் நாம் இதுவரை பார்த்திராத பாத்திர படைப்பில் வேல ராமமூர்த்தி பின்னி பெடல் எடுக்கிறார். அவர் பேசும் வசனமான எல்லோருக்கு மேலையும் ஒரு கத்தி இருக்கு உனக்கு காதல் உங்கப்பாவுக்கு ஜாதி எனக்கு ஏசு என்பதே படத்தின் ஆணிவேர். மெஹந்தியின் தந்தையாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ் மிக தேர்ந்த நடிப்பில் மின்ன கொஞ்சம் கருப்பு வெள்ளை கலந்த கத்தி வீரனாக அங்கூர் விகாள் கச்சிதமாக நடித்திருக்கிறார். பாவம் இவரை கடைசியில் வேண்டுமென்றே ஒரு அருவருக்க தகுந்த வில்லனாக மாற்றியிருப்பது ஏமாற்றம். மகளாக வரும் பூஜா கடைசியில் மனசுல இருக்குறவன்தான் புருஷன் என்ற நெத்தியடி வசனம் பேசி கைதட்டல் வாங்குகிறார். மாரிமுத்து அவர் மனைவியாக நடித்திருப்பவர் மற்றும் அந்த காதலர்களுக்கு அடைக்கலம் தரும் கிறிஸ்தவ பெண் என்று அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமடி என்கிற பெயரில் கடிக்கும் ஆர் ஜெ விக்னேஷ் காந்த் தான் படத்த்துக்கு திருஷ்டி இவர் வரும் காட்சிகள் அனைத்தும் படத்த்துக்கு கட்டை கால் கொடுத்து விழா வைக்கின்றன. 

மெஹந்தி சர்க்கஸில் சிறந்த காட்சிகள் அந்த தொண்ணூறுக்கு நம்மை கொண்டு செல்லும் அனைத்தும். அதுவும் இளையராஜாவின் அழியா பாடல்கள் வந்து காதுகளையும் மனதையும் வருடுகின்றன. அதிலும் இதயத்தை திருடாதே படத்தின் & ஓ பாபா லாலி பாடல் கதைக்கும் ஒரு முக்கிய விஷயமாக பயன்பட்டு இருக்கிறது. பாதிரியார் பாத்திர படைப்பும் அவருக்குள் புதைந்திருக்கும் காதலும் நெஞ்சை தொடுகின்றன அதே போல் ஹீரோவின் தாய் ஜாதி வெறி பிடித்த கணவனை கண்டிக்க முடியாமல் வாத்து படங்களை தையல் செய்வது மற்றும் ஜாதி வெறி பிடித்தவனுக்கு நெத்தியடி கொடுக்கும் அவன் முடிவு என்று நெகிழ வைக்கும் தருணங்கள் படத்தில் படர்ந்து கிடக்கின்றன. நாயகன் நாயகி ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து ஜாதி வெறியர்கள் அவர்களை அடித்து நொறுக்கும் பொது காமிரா வீட்டினுள்ளே நுழைந்து பாதிரியார் இந்த குழந்தைகளை காப்பாற்று என்று எழுதியிருக்கும் கடிதம் பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களுக்கு கீழே இருப்பது டைரக்டரின் ஆழமான முத்திரை. சமுதாய விமர்சனம் மற்றும் நிகழ் கால அரசியலை சாடும் வசனங்கள் பளிச். 

குறை என்று பார்த்தால்  படத்தின் ஆணிவேரான காதலே அவ்வளவு ஆழமாக இல்லாமல் மேம்போக்காக இருப்பதால் அவர்கள் பிரியும்போதும் சரி சேர்வர்களா மாட்டார்களா என்ற எந்த வித பதட்டமோ ஆவலோ நம்மை தோற்றம் தள்ளியே இருந்து கவனிக்க வைப்பது சறுக்கல். ஹீரோவுக்கும் சர்க்கஸ் முதலாளிக்கும் இடையே கூட பெரிய சர்ச்சை இல்லாமல் சாதாரணமாக முடிவதும் அவர் இவருக்கு வைக்கும் பரீட்சை கூட ஒப்புக்கு போல தோன்றுகிறது. ஹீரோவும் ஹீரோயினும் சேர்வதற்காக அந்த ஜாதவ் கதாப்பாத்திரத்தை கேவலமான ஆளாக சித்தரிப்பதும் ஒட்டவில்லை. இடைவேளைக்கு முன்பு கொஞ்சமும் அதற்கு பிறகு பல இடங்களிலும் படம் தட்டு தடுமாறி ஆமை வேகம் கொள்வது  பொறுமையை சோதிக்கிறது. 

ஷான் ரோல்டன் ஒரே மாதிரி ஒலிக்கும் சில மெலோடிகளை கேட்கும்படி இசையமைத்திருக்கிறார் பின்னணி இசையில் அவர் நன்றாக உழைத்தும் இளையராஜாவின் பாடல்களே பல இடங்களில் அவர் பணியை செய்வதால் கொஞ்சம் குறையாகத்தான் தெரிகிறது. மெஹந்தி சர்க்கஸில் மிக பெரிய பிளஸ் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே தான் மனிதர் நம்மை கொடைக்கானலுக்கும் மஹாராஷ்டிராவுக்கும் பின் கதை எங்கெங்கு செல்கிறதோ எல்லா இடத்திற்கும் தன் இயற்கையான ஒளியும் காமிரா கோணங்கள் மற்றும் அசைவுகளால் அசரடிக்கிறார். எடிட்டர் பிலோமின் ராஜ் காலை இயக்குனர் சதீஷ் குமார் ஆகியோரும் மிக சிறந்த உழைப்பை கொட்டி இருக்கிறார்கள். ராஜு முருகன் ஒரு ஆழமான காதல் கதையை எழுதியதைவிட வசனங்களில் கவனம் ஈர்க்கிறார். இயக்குனர் சரவணராஜேந்திரன் நடிகர்களிடம் சிறந்த நடிப்பை வாங்கி கதை சொல்லும் விதத்திலும் ஒரு வித நேர்த்தியும் தனித்தன்மையும் காண்பித்து தான் ஒரு கவனிக்க பட வேண்டிய அறிமுகம் என்பதை கோலோச்சி காட்டியிருக்கிறார். 

வித்தியாசமான படங்களை விரும்புபவர்கள் பல அழுத்தமான காட்சிகள் கொண்ட இந்த காதல் கதையை தாராளமாக பார்க்கலாம்.
 

Rating : 3.0 / 5.0