82 வயதில் விண்வெளி பயணம் செய்த சாதனை பெண்மணி… கனவு திட்டத்தில் புது மைல்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விண்வெளிக்கு சுற்றுலா ராக்கெட் அனுப்பும் முயற்சியில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ். இதற்கான சோதனை ஓட்டத்தில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
உலகின் பெரிய பணக்காரரான ஜெஃப் பெஸோஸ், சமீபத்தில் அமேசான் நிறுவனச் செயல்தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். அதற்குப் பின்பு விண்வெளிக்கு சுற்றுலா ராக்கெட் அனுப்பும் தனது கனவுத் திட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார். இதற்காக ப்ளூ ஆரிஜின் எனும் நிறுவனத்தைத் துவங்கிய இவர் நேற்று முன்தினம் விண்வெளிக்கு சென்று 11 நிமிடம் வரை அங்கே மிதந்த தனது அனுபவத்தைத் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெஃப் பெஸோஸின் கனவுத் திட்டத்தில் 82 வயது வேலி ஃபங்க் எனும் பெண்மணியும் இடம்பிடித்து இருந்தார். 1960 வாக்கில் விண்வெளி போட்டிக்கான பயிற்சியில் முன்னோடி பங்கேற்பாளராக இருந்த வேலி ஃபங்க் இதற்கு முன்பு பலமுறை விண்வெளிக்கு செல்ல முயற்சித்து இருக்கிறார். இதற்காக 62 வருடங்களுக்கு முன்பு “மெர்குரி 13“ எனும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருடைய கனவு நிறைவேறாமலே போய் இருக்கிறது.
தற்போது 62 வருடங்களுக்குப் பிறகு தனது கனவை ஜெஃப் பெஸோஸ் உடன் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இவர் விண்வெளியில் மிதந்தத் தருணத்தில் “ஓ என்ன அதிசயம், பூமியை பாருங்கள்” என்று வியக்கத் துவங்கிவிட்டாராம். இதுகுறித்த தகவல்களை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.
நேற்றுமுன் தினம் டெக்சாஸ் மாகாணம் வான் ஹார்னுக்கு அருகே உள்ள தனியார் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு பறக்க துவங்கிய நியூஷெப்பர்ட் எனும் ராக்கெட்டில் ஜெஃப் பெஸோஸ், அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், வாலி ஃபங்க், 18 வயது மாணவர் ஆலிவர் டேமென் ஆகியோர் பயணித்தனர். 3,600 கி.மீ வேகத்தில் பயணித்த அந்த ராக்கெட் வெறும் 2 நிமிடத்திற்கு உள்ளாகவே விண்கலனை தனியாக பிரித்து விட்டிருக்கிறது.
இதையடுத்து கர்மன் கோடு எனப்படும் பகுதிக்கு சென்ற அந்த விண்கலம் பூமியில் இருந்து மேல்நோக்கி 100 கி.மீ தூரத்தில் உள்ள விண்வெளி எல்லையில் மிதக்கத் துவங்கி இருக்கிறது. இதனால் சரியாக 11 நிமிடம் 11 வினாடிகள் அந்த விண்கலத்தில் இருந்த நான்கு பேரும் சீட் பெல்ட்டை விலக்கிவிட்டு பூமியின் மேற்பரப்பை கண்டு ரசித்தாகத் தற்போது கூறியுள்ளனர்.
விண்வெளியில் மிதந்த விண்கலம் பின்னர் 106 கி.மீ வேகத்தில் பாலைவனப் பகுதியில் பாரசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியது. இதற்கு முன்பு பிரிட்டன் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்குச் சென்றுவிட்டு திரும்பினார். தற்போது அமேசான் நிறுவனர் விண்வெளிக்கு திரும்பிவிட்டு திரும்பி இருக்கிறார். இதையடுத்து இரு நிறுவனங்களுமே தற்போது விண்வெளிக்கு சுற்றுலா ராக்கெட் அனுப்பும் முயற்சியைத் துவங்கி இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout