9 பேர் கொண்ட குடும்பம் ஒரேநாளில் பிறந்த நாள் கொண்டாடும் அதிசயம்… கின்னஸ் சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தில் வாழும் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாள் வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? இதற்கு முன்பு ஒரே நாளை பிறந்த நாளாகக் கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளைப் பார்த்திருப்போம். ஆனால் அம்மா, அப்பா உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாள் வருகிறது என்பதுதான் இங்கு தனித்துவமான விஷயமாக இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டிலுள்ள லர்கானா பகுதியில் வசித்துவரும் மங்கி குடும்பம் என்று பெயர்பெற்ற குடும்பத்தில் வசித்து வருபவர்கள் அமீர் அலி, குதேஜா. ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்த இருவரும் கடந்த 1991 இல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த திருமணமும் அவர்கள் பிறந்த தினமான ஆகஸ்ட் 1 ஆம் தேதியே நடைபெற்றிருக்கிறது.
இப்படி ஒரே நாளில் பிறந்த இருவரும் அதே தினத்தில் திருமணம் செய்து கொண்டதே நமக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால் இவர்களுடைய முதல் குழந்தை சிந்து 1992 ஆக்ஸ்ட் 1 ஆம் தேதியே பிறந்துள்ளார். அதையடுத்த பிரசவமும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியே நடைபெற்று சசுய், சப்னா எனும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிறந்த அமீர், அம்பர் என்ற மகன்களும் வெவ்வேறு ஆண்டுகளில் ஆனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதியே பிறந்துள்ளனர். பின்னர் இந்தத் தம்பதிகளுக்கு அம்மார், அஹ்மர் என்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இவர்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியே பிறந்துள்ளனர். இப்படி 19-30 வயதுள்ள 7 குழந்தைகளும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியே பிறந்துள்ளனர்.
இதற்கு முன்பு அமெரிக்காவிலுள்ள கம்மின்ஸ் சகோதரர்கள் 5 பேர் பிப்ரவரி 20 ஆம் தேதி பிறந்துள்ளனர். இதனால் அதிகளவில் சகோதரர்கள் ஒரே நாளில் பிறந்தது அதிசயமாகப் பார்க்கப்பட்டு அவர்களுக்கு கின்னஸ் சாதனை பட்டம் அளிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தானில் அம்மா, அப்பா உள்ளிட்ட 7 குழந்தைகளும் ஒரே நாளை பிறந்த நாளாகக் கொண்டிருப்பது இன்னும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இது குறித்துபேசிய அந்தத் தம்பதிகள் நாங்கள் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. இயற்கையாகவே அப்படி அமைந்துவிட்டது என்று தெரிவித்து இருப்பதும் ஆச்சர்யத்தையே கொடுக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments