கணினி புரோகிராமில்… கின்னஸ் சாதனை படைத்த 2 ஆம் வகுப்பு இந்திய மாணவன்!!!
- IndiaGlitz, [Friday,November 13 2020]
கம்பியூட்டர் புரோகிராமைப் பார்த்து பெரியவர்களே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்போது நம்ம ஊரு 6 வயது சிறுவன் அதில் கின்னஸ் சாதனை புரிந்து இருக்கிறான். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அகமதாபாத்தைச் சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய கணினி புரோகிராமர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் உலகிலேயே இளம் கணினி புரோகிராமர் என்ற அடையாளத்தோடு தற்போது கின்னஸ் ரெக்கார்டைத் தட்டிச் சென்றிருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்புவரை C, C++ போன்ற கணினி மொழிகளுக்கு அதிக மவுசு இருந்தது. அந்த இடத்தைத் தற்போது பைத்தான் கணினி மொழி பிடித்து விட்டது. இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலும் பைத்தான் கணினி மொழியே பரிந்துரைக்கப் படுகிறது. இந்த பைத்தான் கணினி மொழியை வெறுமனே 6 வயதில் நம்ம அகமதாபாத்தைச் சேர்ந்த அர்ஹாம் எனும் 6 வயது சிறுவன் கரைத்து குடித்து விட்டார்.
மேலும் இவர் 2 வயதில் இருந்தே கணினியையும் திறன் பேசியையும் கையாளப் பழகத் தொடங்கிவிட்டதாக அவனது பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர். 3 வயது முதலே விண்டோஸ், ஐஓஎஸ் ஆகிய கணினி மற்றும் திறன்பேசியின் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினாராம். மேலும் அவரது தந்தை பைத்தான் மொழியை கையாள்வதைப் பார்த்து புதிர் போட்டிகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பதிலும் அர்ஹாம் பேரார்வம் கொண்டிருக்கிறார்.
இதைப்பார்த்த அவரது தந்தை அர்ஹாமுக்கு கணினிமொழியை வைத்து புரோகிராம் வடிவமைப்பதைக் கற்று கொடுத்து இருககிறார். அதை கற்றுக்கொண்ட அக்ஹராம் தற்போது கணினி புரோகிராம் வடிவமைப்பதில் படு கில்லாடியாக மாறிவிட்டார். சின்ன சின்ன கணினி விளையாட்டுகளையும் அவர் தானாகவே வடிமைப்பு செய்து தற்போது மைக்ரோசாப்ட் நடத்திய தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் உலகின் இளம் வயது கணினி புரோகிராமர் என்ற அடையாளத்தோடு கின்னஸ் சாதனைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.