Download App

Meesaya Murukku Review

ஹிப் ஹாப் தமிழா ஆதி யூ டியூப் மூலம் பிரபலமாகி பின் திரையுலகில் நுழைந்து ஒரு பாடகராகவும் இசையமைப்பாளராகவும் முதிர்ப்பதித்து இப்பொது மீசையை முறுக்கு மூலம் எழுத்து மற்றும் இயக்கம் ஆகிய பொறுப்பேற்று அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தபடி இந்த படம் ஆதியின் நிஜ வாழ்க்கையை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளது. விவேக்கின் பையனான ஆதி பள்ளியில் ஒரு பயந்தாங்கொள்ளி யாரவது வம்பிழுத்தால் தன் தம்பியை வைத்து பழி வாங்குகிறவர். உடன் படிக்கும் மாணவி நிலா மீது ஒரு கண். பள்ளி முடித்து கல்லூரி செல்லும் ஆதி மற்றும் அவர் நண்பர் ஆர் ஜெ விக்னேஷ் அங்கு சில தில்லாலங்கடி வேலை செய்து சீனியர்களின் ராக்கிங்க்கிலிருந்து தப்பிக்கிறார்கள். திடீர் திருப்பமாக நிலவும் அதே கல்லூரி என்று தெரிய வந்ததும் அவரை வெவேறு வழிகளில் காதல் வயப்பட்ட வைக்க போராடி ஒரு வழியாக ஜெயிக்கிறார். அதே சமயம் அவரின் கல்லூரி வாழ்க்கை முடிந்து தந்தி ஒரு வருடம் இசை துறையில் சாதிக்க அவகாசம் தருகிறார். தன் வாழ்க்கையிலும் லட்சியத்திலும் காதலிலும் ஆதி சாதித்தாரா இல்லையா என்பதே மீதி கதை. 

நம் பக்கத்துக்கு வீடு பையன் போன்ற தோற்றத்தில் ஆதி திரையில் உறுத்தாமல் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதாகட்டும் காதல் காட்சிகளாகட்டும் பின் பாதியில் வரும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளாகட்டும் பாஸ் மார்க்குக்கு மேலே வாங்கி விடுகிறார். ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் கூட செயற்கைத்தனமில்லாத ஒரு கண்ணியமான அப்பாவாக விவேக் மின்னுகிறார். ஆரம்ப காட்சியில் பள்ளியில் தமிழ் பேசினான் என்று ஸ்கூல் பாதிரியார் கூப்பிட்டு கண்டிக்க விவேக் அடிக்கும் தமிழ் பற்று பஞ்ச் வசனங்களில் தியேட்டர் அதிர்கிறது. கதாநாயகியாக வரும் ஆத்மீகா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் இறுதி காட்சியில் பிரேக் அப் சொன்னாலும் அவர் மேல் கோபம் வரவில்லை. யூ டியூப் சானெல்களில் பிரபலமான ஆர் ஜெ விக்னேஷ் மற்றும் ஷா ரா பெரிய திரையில் தங்களுக்கு கிடைத்திருக்கும் அருமையான அறிமுகத்தை நன்கு பயன்படுத்தி இருவருமே பெரும்பாலான காட்சிகளில் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார்கள். அவர்களை போலவே பல யூ டியூப் திறமையசாலிகளை படம் நெடுக்க பயன் படுத்தியிருக்கிறார் ஆதி. தம்பியாக நடித்திருக்கும் ஆனந்தும் சூப்பர்.

படத்தின் மிக பெரிய பலம் பெரும்பாலான காட்சிகளில் நகைச்சுவை எடுபடுவதே மற்றும் கல்லூரி கதையாக இருப்பினும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. காதல் காட்சிகளும் விரச கோட்டை தாண்டாமல் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஹீரோவும் அவர் நண்பரும் புகை மற்றும் தண்ணி அடிக்காதவர்களாக காட்டியதற்கே ஒரு பெரிய சபாஷ். பாரதி மற்றும் தமிழின் பெருமை சொல்லும் இடங்களில் புல்லரிக்கிறது. கிளைமாக்ஸ் நோக்கி செல்லும்போது உணர்ச்சி பூர்வமாக கதை மாறிவிடுவதால் வலுவாகி விடுகிறது. அன்னன் தம்பி பாச பிணைப்பு அப்பா மகன் உறவு சொன்ன விதம் அருமையோ அருமை. 

மைனஸ் என்று பார்த்தல் முதல் பாதியிலும் பின் பாதியில் கொஞ்சமும் ஆமை வேகத்தில் நகரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. கதை ஒரே இடத்தில சுற்றி சுற்றி வருவதும் கதாசிரியரின் வசதிக்கேற்ப கதாபாத்திரங்கள் திடீர் திடீர் என நுழைவதும் திருஷ்டி. 

படத்தின் மிக பெரிய பலம் ஆதியின் பாடல்கள் நாட்டுப்புறம் காணா ராப் மற்றும் மெலடி என்று ரௌண்டு கட்டி அடித்து இளசுகளை குஷி படுத்துகிறார். ஒளிப்பதிவு கச்சிதம் எடிட்டர் கத்திரிக்கோலுக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம். சுந்தர் சி மற்றும் குஷ்பூ இளசுகளை கவரும் நல்ல ஒரு ப்ரொஜெக்ட்டை தேர்ந்தெடுத்து தயாரித்திருக்கிறார்கள். ஆதிக்கு பல காட்சிகளை மேம்போக்காக எடுத்து விட்டிருந்தாலும் பெரும்பாலும் போர் அடிக்க வில்லை அதே போல் நல்ல கருத்துகளை சொல்லி உணர்ச்சிகரமாகவும கதை கொண்டு சென்ற விதத்தில் தாராளமாக தன் மீசையை முறுக்கு விட்டு கொள்ளலாம். 

இளமை துள்ளலுடன் வந்திருக்கும் இந்த இசை சித்திரத்தை தாராளாமாக கண்டு மகிழலாம். 

Rating : 2.8 / 5.0