கொரோனா நோயாளிகளுக்கு தியான சிகிச்சையா??? அசத்தும் தமிழகம்!!!
- IndiaGlitz, [Saturday,June 20 2020]
கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் நலம் மட்டுமல்ல மனநலமும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதில் தமிழகம் கவனமாக இருக்கிறது. இதனால் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு இருக்கும் 650 நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளோடு இயற்கை யோகா மற்றும் தியான முறை பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக மருத்துவமனைகளில் இயற்கை பாரம்பரிய மருந்துகளுக்கும் யோக தரிசனங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இதுவரை கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. சிகிச்சை மருந்துகளும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் யோகா பயிற்சியை வழங்குமாறு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. இந்தியாவின் ஆயுஷ் அமைச்சம் ஏற்கனவே கொரோனா தடுப்புக்கு ஒரு ஹோமியோபதி மருந்தை பரிந்துரை செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கும் தற்போது இயற்கை முறையிலான யோகா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நோய்க் குறித்த பயம் நீங்கி நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படும் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய முறைப்படி கஷாயமும் கொடுக்கப் படுகிறது. இந்த கஷாயம் தொற்றுகளால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை சரிசெய்யும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் முக்கிய வேலையையும் இந்த கஷாயம் செய்வதாகக் கூறப்படுகிறது. தற்போது யோகா மற்றும் தியான பயிற்சிகளை மருத்துவர்கள் அனைத்து அரசு மருத்துவ மனைகளில் வழங்கி வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கு ஆன்லைனிலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காலை வேளைகளில் 10 மணிக்கு முன்னால் மற்றும் மாலை வேளிகளில் 4 மணிக்கு பின்னால் சூரிய ஒளியில் சிறிது நேரம் யோகா பயிற்சி செய்தாலே நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இயற்கை முறையிலான யோகா முறையும் நித்ரா தியான பயிற்சியும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக தமிழக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். இதனால் ரத்த அழுத்தம் குறையும். பதட்டம், பயம் போன்ற தொல்லைகளும் குறைந்து நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா நோயாளிகள் பலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். இதுபோன்ற பாதிப்புகளையும் யோகா பயிற்சி சரிசெய்துவிடும். வாசனை அற்று இருக்கும் கொரோனா நோயாளிகளும் தற்போது நல்ல மேம்பாட்டை உணருவதாகக் கூறியுள்ளனர். கொரோனா சிகிச்சையில் பாரம்பரிய மருத்துவ முறைகள் பயன்படுத்தப் படுவது பற்றி இந்திய ஆயுஷ் அமைச்சகம் மேலும் பல ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.