கொரோனாவிற்கு மருந்து??? மாட்டுக் கோமியம் அருந்திய இந்து மகா சபையினர்!!! வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளும் தடுப்பு வழிமுறைகளும் தொடர்ந்து பரப்பப் பட்டு வருகிறது. சித்த மருத்துவம், பழைய மருத்துவ முறைகள் என ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகளை பரிசோதிப்பது குறித்து சமூக ஊடகங்களில் ஆலோசித்து வருகின்றனர். மேலும், தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது. 

வெள்ளைப்பூண்டு, கிராம்பு, பசுவின் கோமியம், கறிவேப்பிலை போன்ற பொருட்கள் நோய் தடுப்பு மருந்தாகப் பயன்படும் என்று சமூக வலைத் தளங்களில் கருத்துகள் வெளியாகியது. இது குறித்து மருத்துவர்கள் இத்தகைய கருத்துக்களை நம்ப வேண்டாம், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படாத ஒன்று என மறுத்தும் இருந்தனர். 

இந்நிலையில் அகில இந்து மகா சபை நிர்வாகிகள் கொரோனாவைத் தடுக்கும் மருத்துவக் குணம் பசுவின் கோமியத்திற்கு இருப்பதாகக் கூறி கூட்டாக கோமியத்தை அருந்தியும் இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. 

முன்னதாக, அசாம் சட்டமன்றக் கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ சுமன் ஹரிப்பிரியா “பசுவின் சாணம் மற்றும் கோமியத்திற்கு கொரோனாவைக் கட்டுப் படுத்தும் தன்மை உண்டு“ எனப் பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இவரின் கருத்தினை பலர் விமர்சனம் செய்து இருந்தனர். 

தற்போது, அகில இந்து மகா சபை நிர்வாகிகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை அறிவியலுக்கும் சற்றும் பொருந்தாதக் கருத்து எனப் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.