தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர் குழு தகவல்
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
தமிழ்நாட்டில், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவ ஆலோசனைக்குழு, தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்பல பல அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்வது, பாதிப்பு இல்லாத பகுதிகளில் தளர்த்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மருத்துவ குழுவினர், செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘தமிழ்நாட்டில், ஒட்டுமொத்தமாக ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொருத்தே, ஊரடங்கு விதிகளை படிப்படியாகத் தளர்த்த பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சென்னையில் இப்போதைக்கு ஊரடங்கு தளர்வு இருக்காது என்று கூறப்படுகிறது.