இனி திரைத்துறை நபர்களின் துக்க வீடுகளில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை: தயாரிப்பாளர் சங்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்த போது ஊடகங்கள் அதை காட்சிப்படுத்த போட்டி போட்டதும், இரங்கல் தெரிவிக்க வந்த பிரபலங்களிடம் கட்டாயப்படுத்தி பேட்டி எடுத்ததும் அத்துமீறியதாக கருதப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உட்பட ஒரு சிலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருக்கும் நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ’இனி திரைத்துறை நபர்களின் துக்க வீடுகளில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த சங்கத்தின் தலைவரான பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது.
அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள்..உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும்.
அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது.
உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது.
வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது.
முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று.
இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது ஊடகங்கள். மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?
நேற்றும்.. இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது.
குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள்... மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும்.
அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.
ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
இவ்வாறு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com