'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் ஆப் உதவியால் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்
- IndiaGlitz, [Tuesday,April 11 2017]
இளையதளபதி விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மருத்துவ மாணவியான இலியானா கூறும் டிப்ஸ் மூலம் விஜய் பிரசவம் பார்த்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாக்பூர் அருகே ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு மருத்துவ மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் சீனியர் மருத்துவரின் உதவி பெற்று பிரசவம் பார்த்தார்.
சமீபத்தில் நாக்பூர் அருகே ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அறிந்த உறவினர்கள் உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
கர்ப்பிணி பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்ட டிடிஆர், ரயிலில் மருத்துவர் யாராவது பயணம் செய்கின்றார்களா? என்று தேடினார். ஆனால் மருத்துவர் யாரும் இல்லாத நிலையில் விபின் காட்ஸி என்ற நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் ஒருவர் பிரசவம் பார்க்க முன்வந்தார்.
உடனடியாக ஆண்கள் அனைவரும் அந்த ரயில் பெட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்குள்ள பெண்களின் உதவியோடு விபின்காட்ஸி பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து விபின்காட்ஸி கூறியபோது, 'குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதிகள் வெளியே வர சிரமப்பட்டது. உடனே நான் அதனை போட்டோ எடுத்து மருத்துவர்கள் உள்ள வாட்ஸ்அப் குருப்பில் பதிவு செய்தேன். அதனைப் பார்த்து ஒரு சீனியர் மருத்துவர் எனக்கு அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையின் படி வெற்றிகரமாக பிரசவம் செய்தேன்' என்று கூறியுள்ளார். இக்கட்டான சமயத்தில் விபின் செய்த இந்த உதவிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.