7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்!!!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வினால் (நீட்) அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் உள்இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தது. இதற்கான ஒப்புதல் தமிழக அமைச்சரவையில் பெறப்பட்டாலும் நடைமுறைப் படுத்துவதில் காலதாமதம் ஏற்படுமோ என மாணவர்கள் அச்சம் தெரிவித்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தில் தீவிரம் காட்டி இந்த ஆண்டே உள்இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்.

இதனால் மருத்துவம் படிக்கும் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சீட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்கள் நேரில் முதல்வரைச் சந்தித்து ஆசியும் பெற்றனர். மேலும் 7.5% உள்இட ஒதுக்கீட்டு முறையினால் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெறுவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.