தயவுசெய்து எல்லா படத்துக்கும் பிரச்சனை செய்யுங்கள்: அரசியல்வாதிகளுக்கு மயில்சாமி வேண்டுகோள்
- IndiaGlitz, [Sunday,October 22 2017]
விஜய் நடித்த 'மெர்சல்' படம் அரசியல்வாதிகள் பிரச்சனை செய்ததால் தான் சூப்பர் ஹிட் ஆகியது என்றும், இதேபோல் அரசியல்வாதிகள் அனைத்து படங்களுக்கும் பிரச்சனை செய்தால் அனைத்து தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
'மெர்சல்' படம் குறித்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் உள்ள செய்தி சேனல்கள் விவாதம் செய்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் தனியார் செய்தி சேனல் ஒன்றில் மெர்சல் படத்திற்கு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் வரவேற்பும் என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மயில்சாமி, 'சினிமாவில் காலங்காலமாக நாட்டில் நடப்பவைகள் தான் படமாக்கப்பட்டுள்ளது. நூறாவது நாள் படம் முதல் சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வரை திரைப்படங்களில் காட்சியாக உள்ளது. இதேபோல் தான் மக்களால் பாதிக்கப்பட்ட, நாட்டில் நடந்த ஒரு விஷயம் தான் ஜிஎஸ்டி. இந்த கருத்தை விஜய் மெர்சலில் கூறியதில் என்ன தவறு உள்ளது?
சென்சார் முடிந்த ஒரு படத்தின் காட்சிகளுக்கு விளக்கம் கேட்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. எனக்கு தெரிந்து இந்தியா முழுக்க இலவசமாக பப்லிளிசிட்டி இந்த படம் போல் எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. சர்ச்சைக்குரிய காட்சிகள் திரையில் ஓடியிருந்தாலும் ஒருசில ஆயிரம் பேர்கள் தான் பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போது அந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் வாட்ஸ் அப் போன்ற சமூக இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுவரை விஜய், தான் நடித்த படங்களிலேயே அதிக ஃபேமஸ் ஆனது இந்த படத்தில்தான். அதற்கு மத்திய, மாநில அரசை சேர்ந்த சிலரே காரணம். இதேபோல் அனைத்து படங்களுக்கும் அவர்கள் பிரச்சனை கொடுத்தால் தேனாண்டாள் பிலிம்ஸ் போலவே அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் லாபம் அடையும். எனவே அரசியல்வாதிகளே, உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன், எல்லா படங்களுக்கும் பிரச்சனை தாருங்கள்' என்று நையாண்டியாக கூறினார்.