கல்விக்கட்டணம் வசூலிக்க மாட்டோம்: முன்மாதிரியாக திகழும் தமிழக தனியார் பள்ளி!
- IndiaGlitz, [Friday,July 24 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் பெற்றோர்களிடமிருந்து கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே பல தனியார் பள்ளிகள் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சில பள்ளிகள் கல்விக்கட்டணத்தை உடனே கட்டும்படி பெற்றோர்களை வற்புறுத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இன்றி வருமானம் இன்றி இருக்கும் பல ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள், கல்வி கட்டணத்தை கட்டுவதற்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி, கல்வி கட்டணம் இப்போதைக்கு வசூலிக்க போவதில்லை என்று முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020-2021 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாள் வரை பள்ளி கல்வி கட்டணம் மற்றும் வேன் கட்டணம் ஆகியவற்றை வசூலிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது இந்த இக்கட்டான காலத்தில் பெற்றோர்கள் படும் சிரமத்தை மனதில் கொண்டு பள்ளி நிர்வாகம் முடிந்தவரை உங்கள் சிரமத்தில் பங்கெடுக்க கடமைப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அனைவரையும் இந்த சிரமத்தில் இருந்து காத்தருள்வார் என்றும் அந்த பள்ளியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு முன்மாதிரியாக செயல்பட்டிருக்கும் இந்த பள்ளி போல் மற்ற பள்ளிகளிலும் கல்வி கட்டணத்தை பள்ளிகள் திறக்கும் வரை வசூலிக்க வேண்டாம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்