மிகச்சிறந்த முன்மாதிரி… அரசு பேருந்தில் அலுவலகம் வந்த பெண் கலெக்டர்!

  • IndiaGlitz, [Monday,December 20 2021]

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவரும் திருமதி லலிதா இன்றுகாலை தனது வீட்டில் இருந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்து தனது அலுவலகம் வந்துள்ளார். மேலும் ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் வாரத்திற்கு ஒருமுறை பொது போக்குவரத்து மற்றும் மிதிவண்டியைப் பயன்படுத்துமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவரும் பெண் கலெக்டர் திருமதி லலிதா அவர்கள் இன்று காலை தனது வீட்டிலிருந்து நடந்தே வந்து அரசு பேருந்தில் (மகளிர் இலவசப் பயணத்தை பயன்படுத்தி) டிக்கெட் எடுக்காமல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளார். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவு நடந்தே அலுவலகம் சென்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா காலநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் மயிலாடுதுறை அரசு அதிகாரிகள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்து இருக்கிறேன். நானும் இவ்வாறே பொதுபோக்குவரத்தில் பயணம் செய்யவுள்ளேன். இது சிறிய செயலாகத் தெரியலாம். ஆனால் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு அரியலூர் பெண் கலெக்டர் ரமண சரஸ்வதி தனது வீட்டிலிருந்து நடந்தே அலுவலகம் வந்தார். மேலும் வாரத்தில் ஒருநாள் இப்படி அலுவலகம் வருவதை பழக்கப்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தனது உதவியாளர்களுடன் மிதிவண்டியை மிதித்துக் கொண்டு அலுவலகம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.