நடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்!!!
- IndiaGlitz, [Saturday,January 16 2021] Sports News
ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. காரணம் இந்தப் போட்டியில் தோற்கும் தருவாயில் இருந்த இந்திய அணியை ஒரு ஜோடி தமிழில் பேசியே சரிக் கட்டியது. தெலுங்கு மாநிலத்தை சேர்ந்த விஹாரி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் இந்த இருவரும்தான் பேட்டிங்கின்போது, தமிழில் திட்டங்களைத் தீட்டி மிகத் திறமையாக விளையாடியதன் மூலம் கடைசி நேரப் போட்டியை விறுவிறுப்பாக மாற்றினர். இவர்கள் தமிழில் பேசிக் கொண்டது டெஸ்ம்பில் இருந்த மைக் மூலம் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.
இவர்களின் தமிழ் பேச்சுகளை கேட்ட தமிழ் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் பிரிஸ்பனில் இன்று நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ஒரு வீரர் தமிழில் பேசி அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார். அவர்தான் கர்நாடகாவை சேர்ந்த மயங்க் அகர்வால். இவர் டெஸ்ட் போட்டிக்கு அறிமுக வீரராக களம் கண்டு இருக்கும் நடராஜனுக்கு சிறப்பான அறிவுரைகளை தமிழில் வழங்கி இருக்கிறார்.
அதாவது “மச்சி இப்படி போடு…” “மச்சி பந்தை உள்ளே போடு“ “நல்லா இருக்கு… நல்லா இருக்கு…” எனத் தொடந்து நடராஜனுடன் மயங்க் அகர்வால் தமிழிலேயே பேசி இருக்கிறார். இவர்களது உரையாடலை ஸ்டெம்ப் மைக்கில் கேட்ட ரசிகர்கள் அதை சமூக வலைத்தளத்தில் கிராப் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்களான அஸ்வின், நடராஜனைத் தவிர வாஷிங்க்டன் சுந்தரும் களம் இறங்கி இருக்கிறார். இதனால் தமிழ் குரல் 3 ஆக அதிகரித்து இருக்கிறது. இவர்களைத் தவிர ஏற்கனவே அணியில் இருக்கும் தென்னிந்திய வீரர்களான கே.எல்.ராகுல், ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சன் போன்றோருக்கும் தமிழ் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர வட இந்திய வீரர்களான ஷமி போன்றோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் என்பதால் அவ்வபோது போட்டிகளில் தமிழில் பேசி வருகின்றனர். இதனால் இந்திய அணியில் தமிழ் குரல் வலுத்து வருகிறது. மேலும் அவ்வபோது போட்டிக்கு இடையே இவர்கள் பேசும் உரையாடல்களும் மக்களை அதிகம் ஈர்க்கிறது.