மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது

  • IndiaGlitz, [Monday,May 29 2017]

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு மே 17 இயக்கம் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த அமைப்பினை சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி என்பவர் தொடங்கி நடத்தி வருகிறார். தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே21-ம் தேதி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்த போலீசார் அனுமதி தராததால் இந்த நிகழ்ச்சிக்கும் சென்னை மாநகரப் போலீசார் அனுமதி வழங்கவில்லை.

ஆனால் தடையை மீறி திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் பேரணி நடத்த முயன்றனர். இந்த பேரணியில் இயக்குநர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த பேரணி நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அருண்குமார் ஆகியோர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 17 வழக்குகள் திருமுருகன் காந்தி மீது நிலுவையில் உள்ளதால் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.