மாட்டை அடக்க பாஸ்வேர்ட்; அனிமல் ஸ்டார் சாம்பார் ராஜனின் வித்தியாசமான பாணி
- IndiaGlitz, [Thursday,August 10 2017]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை பல பட்டங்கள் நடிகர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அறிமுகப்படத்திலேயே அனிமல் ஸ்டார் என்ற பட்டத்துடன் நடிக்க வருகிறார் சாம்பார் ராசன். இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் மாட்டுக்கு நான் அடிமை'. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம்.
சாம்பார் ராசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கோலிசோடா சீதா மற்றும் சௌந்தர்யா என இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த படத்தை இளையகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் மாடு நன்றாக இருந்தால் விவசாயம் நன்றாக இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.
சமீபத்தில் இந்தப் படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே என்று கூறும் சாம்பார் ராஜன், கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை என்றும். அதை அணிவதில் கூச்சமும் வெட்கமும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மாட்டை பற்றிய என்பதால் இந்த படத்தில் ஜல்லிக்கட்டும் நிச்சயம் உண்டு என்று கூறும் சாம்பார் ராசன் பாட்டு பாடி மாட்டை அடக்கறது அந்த காலம், டெக்னாலஜி மூலம் மாட்டை அடக்குவது இந்த காலம் என்றும் , இந்த படத்தில் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வைத்திருப்பதாகவும் அதன் மூலம் மாட்டை அடக்குவதாகவும் கூறியுள்ளார்.