ஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி: 175/3 (20 ஓவர்கள்)
சென்னை: 131/7 (20 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா
தோனியின் தவறால் இரண்டாவது தோல்வி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதில் துபாயில் நடந்த ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பீல்டிங்
தேர்வு செய்தார்.
அசத்தல் துவக்கம்
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவன் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தது. ஒருபுறம் தவன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம், பிரித்வி ஷா அதிரடி காட்டினார். இதனால் டெல்லி அணின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. இந்நிலையில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் தவன் 35 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய பிரித்வி ஷா 9 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ரன்கள் அடித்து அவுட்டனார். அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் (26), ரிஷப் பந்த் (37*) ஓரளவு கைகொடுக்க டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. கடந்த முறை போல இல்லாமல் கடைசி நேரத்தில் சென்னை பவுலர்கள் சுதாரித்து ரன்களை சிறப்பாக கட்டுப்படுத்தினர்.
மீண்டும் சொதப்பல்
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் (10 ரன்கள், 15 பந்துகள்), வாட்சன் (14 ரன்கள், 16 பந்துகள்) மோசமான துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்தில் வெறும் 5 ரன்கள் அடித்து அவுட்டானார். இது வழக்கம்போலவே தேவைப்படும் ரன்களுக்கான நெருக்கடியை அதிகரித்தது. டெல்லி அணி 11 ஓவரின் முடிவில் வெறும் 1 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் சென்னை அணி அதே 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு 54 பந்தில் 123 ரன்கள் தேவைப்பட்டது. இது சென்னை பேட்ஸ்மேன்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது. அதிரடி காட்ட துவங்கிய கேதர் ஜாதவ் 26 ரன்கள் எடுத்து நார்கே வேகத்தில்
வெளியேறினார்.
நம்பர் 7ஐக் கைவிட்ட தோனி
இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் ஏழாவது வீரராகக் களமிறங்கிய கேப்டன் தோனி, டெல்லி அணிக்கு எதிராக இந்தப் பாலிஸியைக் கைவிட்டு 6ஆவது வீரராக களமிறங்கினார். ஆனால் அதற்குள் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ராக்கெட் வேகத்தில் எகிறியிருந்தது. களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தோனி காட்டிய அதிரடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போதுமானதாக இல்லை. மறுபுறம் மல்லுக்கட்டிய டூ பிளஸியும் (43) ரபாடா வேகத்தில் அவுட்டானார். இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டும் எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தோனி முடிவு தவறா?
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற மூன்று போட்டியிலும் டாஸ் சென்னை அணிக்குச் சாதகமாகவே விழுந்தது. அனைத்திலும் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். எதிரணி பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் களமிறங்கி மிரட்டுகின்றனர். சென்னை அணி வீரர்களோ சேஸிங்கின் இக்கட்டான நிலையில் ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் தோனி அடுத்த முறை இதையும் கருத்தில் கொள்வது நல்லது. சென்னை அணி இந்த தோல்விப்பாதையில் இருந்து மீண்டு வர கேப்டன் தோனி நிச்சயமாக புது வியூகம் வகுத்தே ஆக வேண்டும். அதில் முக்கியமான ஒன்று பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்வதோடு, தோனியும் டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டும். மற்றொன்று டாஸ் சாதகமாக விழுந்தால் பழைய பாலிசியான பீல்டிங்கை தேர்வு செய்வதை கைவிட்டு பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் ரன்கள் சேர்க்க துணிச்சலாக பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். அந்நிய ஆடுகளத்தில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப முடிவை தேர்வு செய்ய தோனி முன்வர வேண்டும்.
ஹெட்மயர் செய்த தவறு
11ஆவது ஓவரில் சென்னை வீரர் டூ பிளஸி கொடுத்த கேட்ச் வாய்ப்பை டெல்லி வீரர் சிம்ரன் ஹெட்மயர் கோட்டைவிட்டார். அதேபோல போட்டியில் 17ஆவது ஓவரில் டூ பிளஸி கொடுத்த இரண்டாவது கேட்ச் வாய்ப்பையும் ஹெட்மயர் கோட்டைவிட்டார். ஆனால் அதே ஓவரின் அடுத்த பந்திலேயே ரபாடா டூ பிளஸியை அவுட்டாக்கினார். டூ பிளஸியின் 2000
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டூ பிளஸி 18 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் அரங்கில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தார். இவர் தனது 67ஆவது இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியுள்ளார். இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் (48 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் அரங்கில் 2000 ரன்களைக் கடந்த 33ஆவது வீரரானார் டூ பிளஸி.
சிறப்பான தொடக்கம், சீரான பந்து வீச்சு இரண்டும் இல்லாமல் தடுமாறும் சென்னை அணியை தோனியின் சீரற்ற ஆட்டமும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இவற்றைச் சரிசெய்ய வேண்டும், அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் சென்னை அணி முன்னேறுவது கடினம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout