விஜய்யின் 'மாஸ்டர்': மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியிடம் பேச்சுவார்த்தையா?
- IndiaGlitz, [Saturday,November 28 2020]
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் திரையரங்குகளில் தான் திரையிட வேண்டும் என்றும் விஜய் உறுதியாக கூறிய இருப்பதன் காரணமாக தயாரிப்பாளர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தும் திரையரங்குகளில் 5 முதல் 10 சதவீத ரசிகர்கள் மட்டுமே வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் கூட்டம் வராத காரணத்தால் ஒரு சில திரையரங்குகள் மூடப்பட்டும் ஒரு சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வெள்ளிக்கிழமை ஒரு சில புதிய திரைப்படங்கள் வெளியான போதிலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய திரையரங்கில் போதிய பார்வையாளர்கள் இல்லாததால் மாலைக்காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வராத நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட்டால் மிகப்பெரிய நஷ்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை முன்னணி ஓடிடி பிளாட்பார்ம் ஒன்றில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’க/பெ ரணசிங்கம்’ மற்றும் ’சூரரைப்போற்று’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடி நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் ’மாஸ்டர்’ திரைப்படமும் ஓடிடியில் வெளிவந்தால் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்