கொத்து கொத்தாகச் செத்துமடிந்த 5,000 பறவைகள்… இன்னொரு பேரழிவா?
- IndiaGlitz, [Tuesday,December 28 2021]
இஸ்ரேல் நாட்டிலுள்ள ஹுலா எனும் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 5,200 கொக்குகள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பறவைகளின் வழித்தடத்தில் நடந்திருக்கும் இந்தச் சம்பவத்தால் மற்றொரு பேரழிவு ஏற்படுமா என அச்சம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பறவைகள் ஆண்டுதோறும் தங்களது இனப்பெருக்கக் காலத்தில் நாடுவிட்டு நாடு இடம்பெயருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவிற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள இஸ்ரேலில் தற்போது பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஹுலா எனும் மாநிலத்தில் இதுவரை 5,200 கொக்குகள் உயிரிழந்து இருக்கின்றன. இதனால் ரத்தமும் சதையுமாக அப்பகுதி முழுவதும் பறவைகளின் இறந்த உடல்கள் காணப்படுகின்றன. இந்த உடல்களை கழுகு போன்ற மற்ற பறவையினங்கள் உண்பதால் மேலும் பறவைக்காய்ச்சல் அதிகரிக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் ஹுலா பகுதியில் உயிரிழந்த கொக்குகளின் இறந்த உடல்களை அகற்றும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் பாதுகாப்பு கருதி இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பண்ணைகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழியினங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன உயிரிழங்களுக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்படுமா அல்லது பறவைக் காய்ச்சல் பாதிப்பு மற்ற நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்று விஞ்ஞானிகளுக்கு கவலை ஏற்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.