உலகப்புகழ் பெற்ற பழமையான பாரீஸ் சர்ச்சில் தீவிபத்து!

உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பாரீஸ் நோட்ரே டேம் கேதட்ரல் சர்ச் நேற்று தீவிபத்தால் சேதமடைந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பாரீஸ் நோட்ரே டேம் கேதட்ரல் சர்ச்சில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், பராமரிப்பு பணியின்போதுதான் தீவிபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான, ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் திகழ்ந்த, உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வரும் இந்த பழமையான சர்ச்சில் தீவிபத்து ஏற்பட்டது பாரீஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் இந்த சர்ச்சை பார்வையிட வருவதாக கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டதால் சர்ச்சின் வடிவம் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டதாக அந்த துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.,

இந்த தீவிபத்தால் ஆரஞ்சு கலரில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததை பாரீஸில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கவலையுடன் பார்த்தனர். மேலும் இந்த தீவிபத்தால் பாரீஸ் நகரின் பல இடங்களில் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த தீ விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில், 'நோட்ரே டேம் கத்தீட்ரல் சர்ச்சில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பார்ப்பதற்கு பயங்கரமானதாக உள்ளது. விரைந்து செயல்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அணைக்க முயற்சி செய்யுங்கள் என கூறியுள்ளார்.