கொரோனா உயிரிழப்பால் பிணக்காடான டெல்லி… நாட்டையே உலுக்கும் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தற்போது இந்தியா முழுக்கவே ஒருவித பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநில அரசுகளுக்கு புது நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதைவிட உச்சபட்சமாக டெல்லியைச் சேர்ந்த சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் போதிய சிகிச்சை கிடைக்காமல் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 306 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளனர் என்றும் அவர்களின் சடலங்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் வைத்து எரிக்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் நேற்றைய புதிய பாதிப்பு எண்ணிகை 3 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் உயிரிழப்பு 2,263 என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையில் டெல்லியில் மட்டும் 306 என்பதும் பதைக்க வைத்துள்ளது.
அதோடு நெருக்கடியான குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட டெல்லியில் தற்போது கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடலை ஒட்டுமொத்த குவியலாக வைத்து எரித்து வருகின்றனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்க ஊழியரான குமார் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த தனது தாயின் உடலை எரிப்பதற்கு கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் தகன மேடையில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியர் கூறும்போது ஒரு வருடம் முழுவதும் எரிக்க வேண்டிய பிணத்தை ஒரே நாளில் வைத்து எரித்துக் கொண்டு இருக்கிறேன் என நெஞ்சம் கனக்கக் கூறுகிறார்.
இப்படி ஒட்டுமொத்த மாநிலமும் பிணக் குவியலாக காட்சி அளிக்கும் அளவிற்கு டெல்லியில் தற்போது கொரோனா நோய் தீவிரம் பெற்று வருகிறது. மேலும் பல இடங்களில் இடுகாடு பற்றாக்குறை காரணமாக வாகனங்களுக்கு இடையில் வைத்து எரிக்கும் நிலைமையும் அந்த மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு டெல்லியில் வைத்து எரிக்கப்படும் பிணங்களில் 5, 15, 25, புதுமணத் தம்பதிகள் என வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பதும் பார்ப்போரை கண்கலங்க வைத்து இருக்கிறது.
மேலும் டெல்லியில் வைத்து எரிக்கப்படும் கொரோனா பிணங்களால் மாநிலத்தில் ஆங்காங்கே நெருப்பு புகையும் வாடையும் வீசுவது கடந்த சில நாட்களில் இயல்பான ஒன்றாகவும் மாறி இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் எரிக்கப்பட்டு வரும் கொரோனா பிணங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதைக்க வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments