மகள்களை காப்பாற்ற கொள்ளையர்களாக மாறும் தந்தைகள்..!
- IndiaGlitz, [Friday,January 10 2020]
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் தன் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி ஒருவர் மருந்தகத்தில் பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க காவல்துறையினர் வெளியிட்டுள்ள அந்தச் சம்பவம் பற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.
அப்பகுதியில் உள்ள ரைட் எய்ட் எனும் மருந்தகத்தில் சாம்பல் நிறத் தொப்பி, கறுப்பு நிறக் கண்ணாடியுடன் கைகளில் க்ளவுஸ் அணிந்தபடி ஒருவர் நுழைகிறார். பின்பு, கடையில் அங்குமிங்குமாக நடமாடிவிட்டு, பில் போடும் இடத்தில் இருப்பவரிடம் ஒரு துண்டுச் சீட்டை நீட்டுகிறார்.
''உங்களுக்கு 15 விநாடிகள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உங்களிடம் இருக்கும் பணம் முழுவதையும் தாருங்கள். என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று எழுதி இருந்ததைப் பார்த்து அதிர்ந்த பெண் பணியாளர், பிளாஸ்டிக் பையில் ரூபாய் நோட்டுகளைத் திணிக்கிறார். அந்த மர்ம நபர் அந்தப் பிளாஸ்டிக் பையை மடித்துத் தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியேறுகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபருக்கு 30 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம். அவரை எங்களால் இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை. முகத்தை மறைக்கவே அவர் கண்ணாடி அணிந்து வந்திருக்கிறார். தேவை என்பது அனைவருக்கும் இருக்கும். அதை நிறைவேற்றிக்கொள்ள இது உகந்த வழியில்லை'' என்று கூறியுள்ளனர்.
இதே பகுதியில் வேறு ஒரு கடையில் கடந்த ஜூலை மாதம் ஒரு மர்ம நபர், தன் மகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய பணம் தேவை என்று கடை பணியாளரை மிரட்டி பணத்தைப் பெற்றுள்ளார்.அச்சத்தில் பணத்தைக் கொடுத்த அந்தப் பணியாளர், ''கொள்ளையடித்த பணம் உங்கள் மகளுக்கு உதவாது என்று கூறியவுடன் அந்த மர்ம நபர் அந்தப் பணத்தை அங்கேயே வைத்துவிட்டு யாரையும் தாக்காமல் சென்றுவிட்டார். அந்த நபர் யார் என்று போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.