'மசாலா படம் - சமூக வலைத்தள விமர்சகர்களுக்கு சாட்டையடி
- IndiaGlitz, [Sunday,October 11 2015]
ஒரு படம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த படத்தின் கதை தற்கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். இதன்படி தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் நடக்கும் அடிதடி, கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் ஒரு படத்தை பத்து பைசா செலவில்லாமல் ஃபேஸ்புக், டுவிட்டரில் விமர்சனம் செய்வது குறித்த கதைதான் 'மசாலா படம்' 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் எங்களுக்கு அதில் குறையிருந்தால் கலாய்க்க உரிமை உண்டு என்று ஒருபுறமும், கடன் வாங்கி கஷ்டப்பட்டு எடுக்கும் ஒரு படத்தை விமர்சனம் என்னும் பெயரில் அந்த படத்தை குதறுவது எந்த விதத்தில் நியாயம் என்று தயாரிப்பாளர் தரப்பு ஒருபுறமும் செய்யும் வாதம்தான் கதையின் கரு.
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த ஒரு படத்தை பிளாக் வைத்திருக்கும் ஒருவர் படுமோசமாக கலாய்த்து எழுதுகிறார். இதனால் அந்த படத்தின் வசூல் பெருமளவு குறைகிறது. இதனால் அந்த தயாரிப்பாளர் கடுப்பாகிறார். இந்நிலையில் பிளாக் எழுத்தாளர் ஒரு விபத்தில் சிக்க, அந்த விபத்துக்கு காரணம், தயாரிப்பாளர்தான் என வதந்தி பரவுகிறது. இந்த பிரச்சனை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பெரிய பிரச்சனை ஆகிறது. தொலைக்காட்சிகளில் விவாதம் ஆகும் அளவுக்கு முற்றுகிறது., இறுதியில் அந்த படத்தின் தயாரிப்பாளரும், படங்களை விமர்சனம் செய்யும் நால்வரும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த விவாதத்தின் இறுதியில் 'உங்களுக்கு ஒரு படத்தை கலாய்க்க மட்டும்தான் தெரியும், முடிந்தால் நீங்களே ஒரு மசாலா படத்தின் கதையை எழுதி வாருங்கள். அந்த கதையை நானே தயாரிக்கின்றேன்' என்று சவால் விட, நால்வரும் அந்த சவாலை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் சவாலை ஏற்றுக்கொண்ட பிறகுதான் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை அமைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அவர்களுக்கு நிஜத்தில் புரிகிறது. இந்நிலையில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களை இந்த டீம் சந்திக்கின்றது. ஒருவர் அப்பாவி ஹீரோ சிவா, மற்றொருவர் ஆக்சன் ஹீரோ பாபிசிம்ஹா, மூன்றாவது நபர் ரொமாண்டிக் ஹீரோ. இவர்கள் மூவரையும் பின் தொடர்ந்து சென்றால் தங்கள் படத்திற்கு கதை கிடைக்கும் என முடிவு செய்யும் இவர்கள் நாயகி லட்சுமிதேவியை மூவரிடமும் பழகவிடுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை. இறுதியில் மூன்று ஹீரோக்களிடம் இருந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் கதை செய்தார்களா? அந்த கதைக்கு தயாரிப்பாளர் கூறிய பதில் என்ன என்பதுதான் படத்தின் டுவிஸ்ட்
தற்காலத்தில் நடைபெறும் சமூக வலைத்தளங்களின் அடிதடியோடு படம் ஆரம்பிக்கின்றது. லைக்ஸ் வாங்குவதற்காக இணைய பயனாளிகள் செய்யும் கூத்துக்கள், ஒரு படத்தை ஓட வைப்பதும் ஒரேயடியாக கவிழ்க்கவும் சமூக வலைத்தளங்களில் செய்யும் வேலைகள் என விறுவிறுப்பாக கதை ஆரம்பிக்கின்றது. ஆனால் மூன்று ஹீரோக்களையும் நாயகி லட்சுமி தொடர ஆரம்பித்தவுடன் படத்தின் வேகம் குறைகிறது. அதிலும் குறிப்பாக பாபிசிம்ஹாவின் காட்சிகளில் பெரும்பாலானவை 'ஜிகர்தண்டா' படத்தை திரும்ப பார்ப்பதுபோல் இருக்கின்றது. அதே கெட்டப், அதே ரெளடி, கிட்டத்தட்ட அதே சம்பவங்கள் என்று படம் நகர்வது ஒரு மைனஸ்.
சிவா தனது வழக்கமான காமெடி ஹீரோ நடிப்பை கொடுத்துள்ளார். ரொமாண்டிக் ஹீரோ கேரக்டரில் நடித்தவரின் நடிப்பு எதார்த்தமானவை. ஒரு புராஜக்ட்டுக்காக நடிப்பது, ஒரு மனிதனின் உணர்ச்சியில் விளையாடுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை இறுதியில் புரிந்து கொள்ளும் நாயகி லட்சுமிதேவியின் நடிப்பும் ஓகே. இவர்தான் இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் என்பதும் ஒரு கூடுதல் தகவல்
இயக்குனர் லட்சுமணனின் திரைக்கதையில் இடையில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், படம் ஆரம்பித்த விதமும், முடித்த விதமும் அருமை. தற்காலத்துக்கு பொருந்தும் இயல்பான வசனங்கள் நச்சென இருக்கின்றது. 'பணம் சம்பாதித்தவன் 'பணம் சம்பாதிப்பது எப்படி' என்ற புத்தகத்தை எழுதமாட்டன்', அதேபோல் திரைக்கதை எழுத தெரிந்த ஒருவன் திரைக்கதை எழுதுவது எப்படி' என்கிற புத்தகத்தையும் எழுதமாட்டன்', அவதார் படத்தில் கண்டம் விட்டு கண்டம் வந்து ஒரு பெண்ணை உஷார் செய்தால் ஏத்துக்குவிங்க, சென்னையில் இருந்து மதுரை சென்று 'கில்லி' போல் ஒரு பெண்ணை தூக்கிட்டு வந்தா கிண்டல் பண்ணுவிங்க, 'ஒரு படத்தை வெற்றி பெற செய்வது உண்மையில் சூப்பர் ஸ்டார் இல்லை, அந்த படத்தை ரசித்த காமென் மேன்தான். தான் செய்ய முடியாததை திரையில் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே போகும்போது தன்னையே அந்த கேரக்டராக நினைத்து செல்பவன் இருக்கும் வரை மசாலா படங்களுக்கு அழிவில்லை' போன்ற வசனங்கள் எதார்த்தமானவை. ஒரு படத்தை விமர்சனம் செய்வது ரொம்ப எளிது. ஆனால் அதே படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டம் என்ற யதார்த்ததை அனைவருக்கும் புரிய வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்
கார்த்திக் ஆச்சார்யாவின் இசையில் பாடல்கள் சுமார்தான். ஆனாலும் பின்னணி இசை ஓகே. மொத்தத்தில் 'மசாலா படம்', விமர்சகர்களை சிந்திக்க வைக்கும் படம்.