தேசபக்தி என்பது கொல்வதில் அல்ல வாழ்வதில் இருக்கிறது.. அவர் வாழ்வார்...! மகாத்மா காந்தி நினைவு நாள்.

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

புத்தர், இயேசுவுக்கு இணையாக காந்தி போற்றப்படுவார்.
                                                                -மவுண்ட்பேட்டன் 

சாதாரணமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை எதிலிருந்து புரிந்து கொள்வீர்கள்.. அவர் எவ்வளவு சொத்து சேர்த்தார் என்பதிலிருந்தா..? எவளவு பிரபலமாக இருந்தார் என்பதிலிருந்தா..? அவருடைய வாரிசுகள் எப்படி இருக்கிறார்கள் என்பதிலிருந்தா..? இல்லை... ஒரு மனிதனின் வாழ்க்கையானது மற்ற மனிதர்களுக்கு அவர் விட்டு சென்ற அனுபவ பாடங்களில் இருந்தே பார்க்கப்படுகிறது.  

எப்படி வாழ்ந்திருக்கிறார் பாருங்கள்.. எவ்வளவு நல்லவர் பாருங்கள்.. இவர் வாழ்க்கையில் இருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என மற்ற மனிதர்கள் பார்க்கும் போது அந்த மனிதரின் மகத்துவம் கூடுகின்றது. மகத்துவம் அடைந்த மனிதர்களை மரணம் எதுவும் செய்ய முடிவதில்லை. மரணம் ஒரு முடிவு அது எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றால் இன்று காந்தி பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது. 

கோட்சேவின் இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவர் மனதில் நிறுத்தி அவரை வாழவைத்துக்கொண்டிருந்த அன்பையும் உண்மையையும் எதுவும் செய்திருக்க முடியாது. இந்தியா பாகிஸ்தான் என பிரித்ததற்காக கொன்றோம் என்கிறார்கள். பிரிவினை என்பது ஒரு தாய் வயிற்று மக்கள் கடைசிவரை அடித்துக்கொள்வது போல் ஆகும் என்று பிரிவினையை கடைசி வரை எதிர்த்தார் காந்தி. இன்று வரை அவர் சொன்னது போல் தான் இந்தியா பாகிஸ்தான் என அடித்துக் கொண்டு இருக்கிறோம். 

நாட்டு பிரிவினையையும் அதனால் சிந்தப்பட்ட ரத்தத்தையும் கண்டு மனம் வெறுத்து போனார் காந்தி. பாகிஸ்தானுக்குள் பாதயாத்திரை போக வேண்டும் என முடிவெடுத்திருந்தார். வன்முறையையும்  மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் அடித்துக் கொள்வதையும் உடனடியாக நிறுத்த விரும்பினார். ஆனால் அடுத்த நாளே கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள் அவர் உடலை தடுத்து நிறுத்திவிட்டன.                              

மதச் சடங்குகளில் சார்புடையவர் என்ற கருத்து அவர் மீது வைக்கப்படுவது உண்டு. அவர் சிறு வயதிலிருந்து வளர்ந்த சூழல் அவ்விதமானது. ஆனாலும் மதமாக அவர் அன்பையே நினைத்தார். இந்துக்களிடம் பேசும் போது ராம ராஜ்யமாகவும் இஸ்லாமியர்களின் கூட்டங்களில் குதாய் ராஜ்யமாகவும் கிருஸ்தவர்களிடத்தில் கிங்டம் ஆஃப் காட் எனவும் அவர் ஆசைப்பட்ட ராஜ்யத்தை பற்றி அவரால் பேச முடிந்தது. அவருக்கு எல்லா கடவுள்களும் ஒன்று என்ற புரிதல் இருந்தது. மதங்களை கடந்து இந்தியர்களாக மக்களை ஒன்றிணைத்ததில் காந்தியின் அன்பு இருந்தது. அதனால் தான் அவர் தேச தந்தை.

காந்தி வருகிறார் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்று கூடிய மக்கள் ஏராளம். சுதந்திரம் என்பது இராணுவத்தை கூட்டி போய் சண்டையிட்டு யாரோ பெற்று தருவதல்ல.. மக்கள் ஒவ்வொருவரின் மனங்களில் இருந்து சுந்திர எண்ணம் உயிர் பெற வேண்டும்.  எதிரியை கூட வெறுக்காமல் அவனிடமும் அன்பு செலுத்தி நீ எங்களை அடிமையாக நடத்துகிறாய் என புரிய வைத்து, சுய வதை செய்து எதிரியின் மனதை மாற்றி அவன் கைகளில் இருந்தே மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததால் தான் அவர் மகாத்மா. துப்பாக்கியால் சுட்டு உடலை அழிக்க யாரால் வேண்டுமானாலும் முடியும். எதிரியை மதித்து அன்பு செலுத்தி மனதை மாற்ற மஹாத்மாக்களால் மட்டுமே முடியும். அதைத் தான் மவுண்ட் பேட்டன் மேலே சொல்லியிருப்பார்.

அவர் கனவு கண்ட ராஜ்ஜியம் அன்பால் நிறைந்தது. அரசு அறத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என நினைத்தார். மத ஆதிக்கத்தை விட்டு விடுங்கள் அது அடிமைத் தனத்திற்கே வழி வகுக்கும் பெறும் சுதந்திரம் வீணாகும் என்று அவரே சொல்லியிருக்கிறார். அதனால் தான் கொல்லப்பட்ட்டார். ஆதிக்கத்திற்கு இடைஞ்சலாக வருவார் என கருதப்பட்டதால் கொல்லப்பட்டார். 1934லேயே காந்தியை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. அப்போது பிரிவினை பற்றிய பேச்சு கூட எழவில்லை. ஆனால் சாதிகளைத் தாண்டி மதங்களைத் தாண்டி எல்லோரையும் இந்தியர்களாக சம உரிமை பெற்றவர்களாக தீண்டாமை அற்றவர்களாக மனிதர்களாக மாற்றியது மாற்றிக்கொண்டு வந்தது ஆதிக்கத்தினை செலுத்த கனவு கண்டு கொண்டிருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. கொல்லப்பட்டார். 

காந்தி எனும் வாழ்க்கைமுறை மக்கள் மனங்களில் நம்பிக்கையாக மாறும் போது மட்டுமே இந்தியா எனும் தேசத்திற்கு பெருமை. ஆம் அவர் வாழ்வார் நன்றியுணர்ச்சி உள்ள அன்பை விரும்புகிற மக்களின் மனதில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.                                      
     

More News

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர். என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வட்டிக்கு கடன் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது..! வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் பதில்.

2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020  - 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ்..! 6000 பேர் பாதிப்பு.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் இரண்டு பரபரப்பான டுவிட்டுக்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை ஆக்ரோஷமாக தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே