தேசபக்தி என்பது கொல்வதில் அல்ல வாழ்வதில் இருக்கிறது.. அவர் வாழ்வார்...! மகாத்மா காந்தி நினைவு நாள்.
Send us your feedback to audioarticles@vaarta.com
"புத்தர், இயேசுவுக்கு இணையாக காந்தி போற்றப்படுவார்."
-மவுண்ட்பேட்டன்
சாதாரணமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை எதிலிருந்து புரிந்து கொள்வீர்கள்.. அவர் எவ்வளவு சொத்து சேர்த்தார் என்பதிலிருந்தா..? எவளவு பிரபலமாக இருந்தார் என்பதிலிருந்தா..? அவருடைய வாரிசுகள் எப்படி இருக்கிறார்கள் என்பதிலிருந்தா..? இல்லை... ஒரு மனிதனின் வாழ்க்கையானது மற்ற மனிதர்களுக்கு அவர் விட்டு சென்ற அனுபவ பாடங்களில் இருந்தே பார்க்கப்படுகிறது.
எப்படி வாழ்ந்திருக்கிறார் பாருங்கள்.. எவ்வளவு நல்லவர் பாருங்கள்.. இவர் வாழ்க்கையில் இருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என மற்ற மனிதர்கள் பார்க்கும் போது அந்த மனிதரின் மகத்துவம் கூடுகின்றது. மகத்துவம் அடைந்த மனிதர்களை மரணம் எதுவும் செய்ய முடிவதில்லை. மரணம் ஒரு முடிவு அது எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றால் இன்று காந்தி பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது.
கோட்சேவின் இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவர் மனதில் நிறுத்தி அவரை வாழவைத்துக்கொண்டிருந்த அன்பையும் உண்மையையும் எதுவும் செய்திருக்க முடியாது. இந்தியா பாகிஸ்தான் என பிரித்ததற்காக கொன்றோம் என்கிறார்கள். "பிரிவினை என்பது ஒரு தாய் வயிற்று மக்கள் கடைசிவரை அடித்துக்கொள்வது போல் ஆகும்" என்று பிரிவினையை கடைசி வரை எதிர்த்தார் காந்தி. இன்று வரை அவர் சொன்னது போல் தான் இந்தியா பாகிஸ்தான் என அடித்துக் கொண்டு இருக்கிறோம்.
நாட்டு பிரிவினையையும் அதனால் சிந்தப்பட்ட ரத்தத்தையும் கண்டு மனம் வெறுத்து போனார் காந்தி. பாகிஸ்தானுக்குள் பாதயாத்திரை போக வேண்டும் என முடிவெடுத்திருந்தார். வன்முறையையும் மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் அடித்துக் கொள்வதையும் உடனடியாக நிறுத்த விரும்பினார். ஆனால் அடுத்த நாளே கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள் அவர் உடலை தடுத்து நிறுத்திவிட்டன.
மதச் சடங்குகளில் சார்புடையவர் என்ற கருத்து அவர் மீது வைக்கப்படுவது உண்டு. அவர் சிறு வயதிலிருந்து வளர்ந்த சூழல் அவ்விதமானது. ஆனாலும் மதமாக அவர் அன்பையே நினைத்தார். இந்துக்களிடம் பேசும் போது "ராம ராஜ்யமாகவும்" இஸ்லாமியர்களின் கூட்டங்களில் "குதாய் ராஜ்யமாகவும்" கிருஸ்தவர்களிடத்தில் "கிங்டம் ஆஃப் காட்" எனவும் அவர் ஆசைப்பட்ட ராஜ்யத்தை பற்றி அவரால் பேச முடிந்தது. அவருக்கு எல்லா கடவுள்களும் ஒன்று என்ற புரிதல் இருந்தது. மதங்களை கடந்து இந்தியர்களாக மக்களை ஒன்றிணைத்ததில் காந்தியின் அன்பு இருந்தது. அதனால் தான் அவர் தேச தந்தை.
காந்தி வருகிறார் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்று கூடிய மக்கள் ஏராளம். சுதந்திரம் என்பது இராணுவத்தை கூட்டி போய் சண்டையிட்டு யாரோ பெற்று தருவதல்ல.. மக்கள் ஒவ்வொருவரின் மனங்களில் இருந்து சுந்திர எண்ணம் உயிர் பெற வேண்டும். எதிரியை கூட வெறுக்காமல் அவனிடமும் அன்பு செலுத்தி நீ எங்களை அடிமையாக நடத்துகிறாய் என புரிய வைத்து, சுய வதை செய்து எதிரியின் மனதை மாற்றி அவன் கைகளில் இருந்தே மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததால் தான் அவர் மகாத்மா. துப்பாக்கியால் சுட்டு உடலை அழிக்க யாரால் வேண்டுமானாலும் முடியும். எதிரியை மதித்து அன்பு செலுத்தி மனதை மாற்ற மஹாத்மாக்களால் மட்டுமே முடியும். அதைத் தான் மவுண்ட் பேட்டன் மேலே சொல்லியிருப்பார்.
அவர் கனவு கண்ட ராஜ்ஜியம் அன்பால் நிறைந்தது. அரசு அறத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என நினைத்தார். "மத ஆதிக்கத்தை விட்டு விடுங்கள் அது அடிமைத் தனத்திற்கே வழி வகுக்கும் பெறும் சுதந்திரம் வீணாகும்" என்று அவரே சொல்லியிருக்கிறார். அதனால் தான் கொல்லப்பட்ட்டார். ஆதிக்கத்திற்கு இடைஞ்சலாக வருவார் என கருதப்பட்டதால் கொல்லப்பட்டார். 1934லேயே காந்தியை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. அப்போது பிரிவினை பற்றிய பேச்சு கூட எழவில்லை. ஆனால் சாதிகளைத் தாண்டி மதங்களைத் தாண்டி எல்லோரையும் இந்தியர்களாக சம உரிமை பெற்றவர்களாக தீண்டாமை அற்றவர்களாக மனிதர்களாக மாற்றியது மாற்றிக்கொண்டு வந்தது ஆதிக்கத்தினை செலுத்த கனவு கண்டு கொண்டிருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. கொல்லப்பட்டார்.
காந்தி எனும் வாழ்க்கைமுறை மக்கள் மனங்களில் நம்பிக்கையாக மாறும் போது மட்டுமே இந்தியா எனும் தேசத்திற்கு பெருமை. ஆம் அவர் வாழ்வார் நன்றியுணர்ச்சி உள்ள அன்பை விரும்புகிற மக்களின் மனதில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com