உலக நாடுகள் அனைத்தும் கால்பதிக்க துடிக்கும் செவ்வாய் கிரகம்!!! மர்மம் நிறைந்த அதன் சிறப்புகள்!!

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

 

சூரிய மண்டல கிரகங்களில் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் ஒரு கிரகமாக செவ்வாய் இருந்து வருகிறது. காரணம் என்னதான் மனிதன் நிலவில் பல ஆய்வுகளையும் விண்வெளி நிலையங்களையும் அமைத்து இருந்தாலும் அது ஒரு கிரகம் அல்ல. சூரியனின் ஒரு துணை கோளாக மட்டுமே பார்க்கப் படுகிறது. இதைத்தவிர சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் பூமியை விட 11 மடங்கு அதிக வெப்பம் கொண்டது. மேலும் அங்கு 3 மாதங்கள் மட்டுமே பகல் இருக்கும். அதைவிட்டால் அருகில் இருக்கும் வெள்ளி மோசமான பருவநிலை கொண்ட ஒரு கிரகமாக இருந்து வருகிறது. அங்குள்ள காற்றழுத்தத்தில் விண்கலன்களை தரையிறங்க முடியாத நிலைமை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அடுத்து செவ்வாயை தாண்டியுள்ள கிரகங்களில் குளிர் அதிகரித்து ஆய்வுகளையே மேற்கொள்ள முடியாத நிலைமையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மனிதனின் காலடி பதிக்க வாய்ப்புள்ள ஒரு கிரகமாக செவ்வாய் இருந்து வருகிறது. இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க ஆய்வு மையம் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு இருந்தது. தண்ணீரைத் தவிர அங்கு அதிபடியான கனிமங்கள், மற்றும் எனர்ஜி தொழில் நுட்பத்திற்குத் தேவையான பொருட்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒருவேளை மனிதன் உயிர் வாழக்கூடிய சூழ்நிலையும் அங்கு இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்த வகையான நிலவியல், பருவநிலை, செவ்வாயின் மேற்பரப்பு, சூழ்நிலை மாற்றங்கள், தட்பவெப்பம், காற்று போன்றவற்றைக் குறித்து ஆய்வு செய்தற்கான முயற்சியை உலகின் அனைத்து வல்லரசு நாடுகளும் தற்போது மேற்கொண்டு வருகின்றன.

இத்தகைய ஆய்வுகளில் உலக விஞ்ஞானிகள் தொடர்ச்சியான தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தில் இருந்து ரோவரை இறக்குவது சாவாலாக காரியமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவும் ரஷ்யாவும் கூட்டணி சேர்ந்து அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையையே தாண்டாமல் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. செவ்வாய் கிரக ஆராய்ச்சியைப் பொறுத்த வரையில் இதுபோன்ற தோல்விகள் ஏராளம். ஆனால் இத்தனை தடைகளையும் தாண்டி கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா விண்கலம் தனது கியூரியாசிட்டி ரோவரை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது என்பது விண்வெளித் துறையில் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது.

அமெரிக்காவின் சாதனையை அடுத்து உலகின் அனைத்து நாடுகளும் செவ்வாயில் கால் பதிப்பதற்கான தீவிரத்தில் இறங்க ஆரம்பித்தன. காரணம் செவ்வாயில் தரையிறங்குவது உலகத்தின் மத்தியில் அந்நாட்டின் வலிமையை பறைச்சாற்றுவது போலவும் தலைமைத்துவத்தை நிரூபிப்பவும் போலவும் உலகத்தின் மத்தியில் கருத்துரு தோன்ற ஆரம்பித்தது. அந்த அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனாவும் தற்போது முன்னிலை வகிக்கின்றன. தற்போது உலகமே கொரோனா தாக்கத்தால் அல்லாடிக் கொண்டிருக்கும் போது கடந்த ஜுலை 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அதுவும் அரபு நாடுகளின் மத்தியில் முதல் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியிருக்கிறது.

இந்த விண்கலம் அமெரிக்காவில் வைத்து உருவாக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹோப் எனப்படும் விண்கலம் மற்றும் அதை எடுத்துச்செல்ல H2A ராக்கெட், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள வசதியாக பல கேமராக்கள், ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்ட ரோவரையும் அவர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடையும் எனவும் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த விண்கலம் ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளித் தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தொடர்ந்து சீனா இந்த மாதம் ஜுலை 23 ஆம் தேதி தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட விண்கலத்தை செவ்வாய்க்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் வுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு இருந்தது. அந்நாட்டின் ஹைன் தீவிலுள்ள விமானத் தளத்தில் இருந்து ஜுலை 23, 2020 அன்று உள்ளூர் நேரப்படி 12.40 மணிக்கு லோப் மார்ச் 5 எனப்படும் ராக்கெட் மூலம் தியான்வென் – 1 என்னும் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டு பழமையான கவிதையை குறிக்கும் விதமாக தியான்வென்- 1 (சொற்களுக்கு எதிரான கேள்வி) என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேற்பரப்பை அடைந்தவுடன் இதில் பொருத்தப்பட்டு இருக்கும் ரோவர் உடனடியாக தரையிறங்காது எனவும் அதன் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். காரணம் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் சூழ்நிலையை ஆய்வு செய்த பிறகு தரையிறக்கலாம் என அந்நாட்டு விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த வகையான திட்டம் விஞ்ஞான உலகிற்கு புதிதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இருந்தே அமெரிக்க விஞ்ஞானிகள் இத்திட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் வெற்றிகரமான முடிவுகளையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

இதன்படி ஒன்று அல்லது இரண்டு மாதம் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுற்றிக்கொண்டு நிலவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விண்கலம் சூரிய மின்சக்தி மூலம் இயங்கக்கூடியது என்றும் குறிப்பிட்டு உள்ளனர். 249 கிலோ எடையுள்ள, பல வருடங்களுக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாறைகளில் உள்ள தண்ணீர், சொவ்வாயின் சுற்று வட்டப்பாதை, நிலவியல் அமைப்பு, தட்பவெப்ப நிலை போன்றவற்றைக் குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உருவாக்கிய விண்கலத்தை இன்று (ஜுலை 30) செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த 2012 முதல் செவ்வாயில் நிலவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவின் அடுத்த கனவுத்திட்டம் இன்று நிறைவேற்றப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. புளோரிடா மாகாணத்தில் உள்ள விமானத் தளத்தில் இருந்து 5 மணிக்கு அனுப்ப இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. நாசா விஞ்ஞானிகள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பெர்செவரன்ஸ் விண்கலத்தில் 7 வகையான தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் 23 காமிராக்கள் பொருத்தப்பட்ட ரோவர் அனுப்பப்பட இருக்கிறது.

அதோடு உலகிலேயே முதல் முறையாக இந்த விண்கலத்தில் ஒரு குட்டி ஹெலிகாப்டரும் இணைத்து அனுப்பப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டர் 2000 முறை சுற்றிச் சுழலக் கூடியதாக இருக்கும் என்றும் காற்று மண்டலம் மிகவும் குறைவாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் இதை இயக்குவது சாவலான காரியம் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படி உலக நாடுகள் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்பவதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை.

செவ்வாய் கிரகம் அடுத்த இரண்டு வருடங்களில் பூமி கிரகத்திற்கு மிக அருகாமையில் வரவிருக்கிறது. இந்த நெருக்கமான சமயங்களில் மேலும் அதிகமான ஆய்வுகளை விஞ்ஞானிகளால் மேற்கொள்ள முடியும். அந்த சமயங்களில் எரிபொருள் குறைவான விதத்திலே விண்கலன்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ளலாம் எனவும் உலக விஞ்ஞானிகள் திட்டம் தீட்டி வருகின்றன. நிலவை அடுத்து உலகின் வல்லரசை பறைசாற்றும் ஒரு கிரகமாக தற்போது செவ்வாயும் மாறிவருவது குறித்து பலரும் பெருமைப் பட்டு கொண்டாலும் இந்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் சண்டையிட்டு கொள்ளாமல் இருந்தோலே போதும் என இன்னொரு பக்கம் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.