குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர்: தட்டிக்கேட்ட கணவருக்கு அடி உதை!
- IndiaGlitz, [Monday,November 02 2020]
விழுப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது மொபைல் போனில் வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை தட்டிக்கேட்ட அவரது கணவருக்கு அடி உதை கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சமீபத்தில் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மொட்டை மாடியில் இருந்து அவரை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த வீடியோவை உமாவிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆசைக்கு இணங்காவிட்டால் குளிக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக அவர் மிரட்டியும் உள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உமா, தனது கணவர் ஆனந்தனிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே ஆனந்தன் பக்கத்து வீட்டில் உள்ள வெங்கடேசனை இதுகுறித்து தட்டி கேட்டதற்கு வெங்கடேசன், அவருடைய தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து ஆனந்தனை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.
இதனால் ரத்த காயத்துடன் தனது மனைவியுடன் காவல் நிலையம் சென்ற ஆனந்தன், வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.