தமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்!

தமிழக-கேரள எல்லையில் ஒரு திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணம் முடிந்த பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் அவரவர் வீட்டிற்கு சென்றதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுக்கும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு என்ற பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்காக மணமகன் இ-பாஸ் விண்ணப்பித்திருந்தார். இன்று காலை திருமணம் நடைபெற உள்ள நிலையில் இன்று வரை அவருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் எல்லையை தாண்டி செல்ல முயன்றபோது அதிகாரிகள் அவரை தடுத்தனர். அதேபோல் மாப்பிள்ளை வருகைக்காக வண்டிப்பெரியார் மாரியம்மன் கோவிலில் மணமகள் வீட்டார் காத்திருந்தனர்.

இந்த நிலையில் எல்லையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் இது குறித்து ஆலோசித்து பெண் வீட்டாரை எல்லைப்பகுதிக்கு வரவழைத்தனர். தமிழக-கேரள எல்லையில் வெகு எளிமையாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சிலர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கேரளா செல்ல மணமகனுக்கும் தமிழகம் செல்ல மணமகளுக்கும் இ-பாஸ் கிடைக்கும் வரை இருவரும் அவரவர் இல்லத்திற்கு திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். விரைவில் இருவருக்கும் இபாஸ் கிடைத்துவிடும் என்றும் அதன்பின்னர் மணமக்கள் தங்கள் புதுவாழ்வை தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.