விமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்
- IndiaGlitz, [Saturday,December 02 2017]
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க் அவர்களின் சகோதரி ராண்டி சக்கர்பெர்க் சமீபத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மசாட்லான் சென்றபோது அருகில் உட்கார்ந்திருந்த பயணி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எழுதிய புகார் கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது: விமானத்தில் தனதருகே உட்கார்ந்திருந்த பயணி ஒருவரால் தான் அசெளகரியத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.. பாலியல் சம்பந்தமான வார்த்தைகளை பயன்படுத்தி தன்னிடம் அந்த நபர் பேசியதாகவும், அந்த விமானத்தில் பயணம் செய்த பிற பெண்கள் மற்றும் பெண் ஊழியர்கள் குறித்த அவரது விமர்சனங்கள் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் ராண்டி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விமான ஊழியர்களிடம் புகார் செய்தபோது, 'அந்த பயணி தங்கள் விமான நிறுவனத்தின் ரெகுலர் வாடிக்கையாளர் என்றும், வேண்டுமென்றால் நீங்கள் வேறு இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதற்காக நான் இடம் மாறி உட்கார வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ராண்டி, விமான ஊழியர்களிடம் இருந்து இந்த பதிலை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ராண்டியின் புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அந்த பயணி மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.