அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை ஆட்சி. மார்க்கண்டேய கட்ஜூ வேதனை

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த சசிகலாவுக்கு கடைசியில் கிடைத்தது ஜெயில் தண்டனைதான். ஆனாலும் சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை தினகரனுக்கும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமிக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டு அவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆரம்பம் முதலே தமிழகத்தின் நிலையை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தால் எப்படி இருக்கும் என்ற தனது கருத்துக்களை நேற்றே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் ஆட்சி சிறையிலிருந்து நடக்க போகின்றது. சிறைக்கு செல்லும் முன்னர் சசிகலா, ஜெயலலிதாவால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தனது உறவினர் தினகரனுக்கு துணை பொதுச்செயலாளராகவும், அவர் சொல்படி கேட்கும் நபரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும் ஆக்கியுள்ளார்.

எனவே தமிழர்களே, வாழ்த்துக்கள்.. அடுத்த 4 ஆண்டுகளுக்கு, ஊழல் செய்து தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து உங்களை ஆளப்போகிறார். சிறைக்கம்பிகளுக்கு பின் இருந்து வரும் உத்தரவுகளை செயல்படுத்தும் ஒரு முதல்வராகவே எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்.

ஆனாலும் கவலைப்படாதீர்கள் தமிழக மக்களே உங்கள் மாநிலத்திற்கு முன்பே இதேபோன்று இன்னொரு மாநிலத்தில் நடந்துள்ளதால் நீங்கள் அடுத்த இடத்தில் தான் இருக்கின்றீர்கள்'

இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூ தனது சமூக வலைத்தளத்தில் வேதனையுடன் கூறியுள்ளார்.