ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு. மாறன் சகோதரர்களுக்கு அளிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Thursday,February 02 2017]
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் சற்று முன் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இந்த வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட அனைவர் மீதும் சாட்டப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சி.பி.ஐ. நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது.
முன்னதாக மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுப்பப்பட்டது.
இதுகுறித்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.
இதையடுத்து சற்று முன்னர் தீர்ப்பளித்த நீதிபதி மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரையும் விடுவித்தார்.